நாடாளுமன்றத்தில் அவமதிப்பு; என்னை தீர்த்துக் கட்ட கதை கட்டப்படுகிறது: எம்பி டேனிஷ் அலி பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி:‘நாடாளுமன்றத்தில் வார்த்தைகளால் என்னை சாகடித்தவர்கள், உண்மையிலேயே என்னை தீர்த்துக்கட்ட கதை கட்டுகிறார்கள்’ என பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். மக்களவையில் கடந்த 21ம் தேதி நடந்த விவாதத்தின் போது, பகுஜன் சமாஜ் எம்பி டேனிஷ் அலியை பாஜ எம்பி ரமேஷ் பிதுரி தகாத வார்த்தைகளால் பேசியது பெரும் சர்ச்சையானது.

இதற்கிடையே, சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பாஜவின் மற்றொரு எம்பியான நிஷிகாந்த் துபே நேற்று முன்தினம் அனுப்பிய கடிதத்தில், ‘‘ரமேஷ் பிதுரி கூறிய கருத்துக்களை எந்த நாகரீக சமூகமும் ஏற்றுக் கொள்ளாது. ஆனால் அதே சமயம், பிரதமர் மோடி குறித்து சாதி ரீதியாக டேனிஷ் அலி அவதூறாக பேசி உள்ளார். அவரது மோசமான பேச்சால்தான் ரமேஷ் பிதுரி அமைதியை இழந்துள்ளார். எனவே டேனிஷ் அலியின் அநாகரீக பேச்சு மற்றும் நடத்தை குறித்தும் விசாரிக்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.

இதற்கு நேற்று பதிலளித்த எம்பி டேனிஷ் அலி, ‘‘நிஷிகாந்த் துபேயின் கடிதத்தை நானும் பார்த்தேன். மக்களவையில் என்னை வார்த்தையால் கொன்றவர்கள் இப்போது வெளியில் நிஜமாகவே கொல்லப் பார்க்கிறார்கள். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை’’ என கூறி உள்ளார். இதற்கிடையே, மற்றொரு பாஜ எம்பி ரவி கிஷண் சுக்லாவும், டேனிஷ் அலி நடத்தை குறித்து விசாரிக்க சபாநாயகருக்கு நேற்று கடிதம் எழுதி உள்ளார்.

The post நாடாளுமன்றத்தில் அவமதிப்பு; என்னை தீர்த்துக் கட்ட கதை கட்டப்படுகிறது: எம்பி டேனிஷ் அலி பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: