திமுக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு மேலும் 3 பேர் அதிரடி கைது: 5 துப்பாக்கி, 25 தோட்டாக்கள் பறிமுதல்

விருத்தாசலம்: திமுக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவத்தில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ராமச்சந்திரன் பேட்டையை சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ தியாகராஜன் மகன் இளையராஜா(46). திமுகவில் சுற்றுப்புற சூழல் அணியின் கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர். இவருக்கும், மணவாளநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜசேகர் மகன்கள் புகழேந்தி ராஜா(27), ஆடலரசு(25) ஆகியோருக்கும் இடையே தேர்தல் முன் விரோதம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இளையராஜா மணவாளநல்லூரில் உள்ள தனது விவசாய நிலத்திற்கு சென்று விட்டு தனது காரில் புறப்பட தயாரான போது அங்கு வந்த புகழேந்திராஜா, ஆடலரசு மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் இளையராஜாவை துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் இளையராஜாவின் இடுப்பில் குண்டு பாய்ந்தது. இது குறித்து இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆடலரசு (25), புகழேந்தி ராஜா (27) உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து இவர்களுக்கு துப்பாக்கி வாங்கி கொடுத்த சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த அபுபக்கர் மகன் முகமது யூனிஸ் (23) என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று விருத்தாசலம்-சித்தலூர் பைபாஸ் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்றிருருந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், திண்டுக்கல் வேடப்பட்டி அன்பரசு (27), தஞ்சாவூர் மாவட்டம் மணலூர் செந்தில்குமார் (24), புதுக்கோட்டை மாவட்டம் குண்டுகுளம் அழகேஸ்வரன் (24) என தெரியவந்தது.

இவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள், 25 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், யூனிஸ் மூலமாக பீகார் மாநிலத்தை சேர்ந்த சோட்டா என்பவரிடமிருந்து துப்பாக்கிகள் மற்றும் குண்டுகள் வாங்கி வந்ததாகவும், இளையராஜா வழக்கில் தங்களை போலீசார் தேடுவதால், தனித்தனியாக சென்று துப்பாக்கிகளை பதுக்கி வைத்து கொள்ளும்படி சோட்டா தெரிவித்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சோட்டாவை பிடிக்க தனிப்படை போலீசார் பீகார் விரைந்துள்ளனர்.

The post திமுக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு மேலும் 3 பேர் அதிரடி கைது: 5 துப்பாக்கி, 25 தோட்டாக்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: