வேலூர் : ஓடிசாவில் இருந்து காட்பாடி வழியாக கேரளாவுக்கு 5 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற வாலிபரை வேலூர் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா உட்பட போதை பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் மதுவிலக்கு போலீசார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரயில்களிலும் ரயில்வே போலீசார் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வடமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா உட்பட போதை பொருட்கள் கடத்துவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் நேற்று மாலை 6 மணியளவில் போலீசார் ஓடிசாவில் இருந்து வந்த கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த ரயில் பெட்டியில் இருந்து இறங்கி பையுடன் வந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர்.
அப்போது, அதில் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பயணியை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்(32) என்பதும், இவர் ஓடிசாவில் இருந்து கஞ்சாவை வாங்கி கொண்டு வந்ததும், வேறு ஒரு ரயிலில் கேரளாவுக்கு கடத்தி செல்ல காட்பாடியில் இறங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
The post ஒடிசாவில் இருந்து காட்பாடி ரயில் நிலையம் வழியாக 5 கிலோ கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது appeared first on Dinakaran.