பார்வையற்ற ஆசிரியர் எழுதிய ‘பாடி விளையாடு பாப்பா’ நூல் * கலெக்டர் வெளியிட்டு பாராட்டினார் * நூலகங்களுக்கு அனுப்பவும் பரிந்துரை பள்ளிகொண்டா அரசு பள்ளியில் பணிபுரியும்

பள்ளிகொண்டா, செப்.23: பள்ளிகொண்டா அரசு பள்ளியில் பணிபுரியும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் எழுதிய ‘பாடி விளையாடு பாப்பா’ என்ற நூலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டு பாராட்டினார். இதை நூலகங்களுக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தமிழ் பாட ஆசிரியராக பணிபுரிபவர் ஜெயக்குமார்(42). கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் 8, 9, 10ம் வகுப்பு மாணவிகளுக்கு தமிழ் பாடங்களை சிறப்பான முறையில் நடத்துகிறார். 17 ஆண்டுகளாக ஆசிரியர் பணியில் உள்ள இவர், இப்பள்ளியில் 14 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்து வருகிறார். தமிழ் மொழி மீதுள்ள ஆர்வத்தினாலும், மாணவர்கள் மீது கொண்டுள்ள அக்கறையினாலும், அவர்களின் அறிவுத்திறன்களை வளர்க்கும் நோக்கத்தால் பல்வேறு புத்தகங்களை இயற்றியுள்ளார். இதுவரை அன்பு நெறி, விடியல் வெளிச்சம், குரங்கும் குருவிகளும், வசந்தம் வரும் வாடாதே ஆகிய 4 நூல்களை இயற்றியுள்ளார். இதில் கடந்த 2018ல் எழுதிய விடியல் வெளிச்சம் என்ற நூல் தமிழ்நாடு அரசு சார்பில் நூலகங்களுக்கு தெறிவு செய்யப்பட்டு அதற்காக விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டு தமிழ் ஆசிரியர் எழுதிய ‘பாடி விளையாடு பாப்பா’ என்ற 122 பக்கங்கள் கொண்ட நூலின் முதல் பிரதியை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் நேற்று வெளியிட, ஆசிரியர் ஜெயக்குமார் பெற்று கொண்டார். தொடர்ந்து, கண்பார்வையில்லாத நிலையிலும் ஆசிரியர் மாணவர்களின் வளர்ச்சிக்காக புத்தகம் எழுதியுள்ளது சிறப்புக்குரியது என கலெக்டர் பாராட்டினார். இதுகுறித்து தமிழ் ஆசிரியர் கூறுகையில், ‘முழுக்க சிறுவர்கள், மாணவர்களின் முன்னேற்ற வளர்ச்சிக்காக மட்டுமே என்னுடைய எழுத்துக்கள் இருக்கும். அதன்படி, இப்புத்தகம் குழந்தைகளை கவரும் விதமாக அமைந்துள்ளது. முதல் பதிப்பாக 100 பிரதிகள் வெளியிட உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு நூலகங்களுக்கு அனுப்பி வைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

The post பார்வையற்ற ஆசிரியர் எழுதிய ‘பாடி விளையாடு பாப்பா’ நூல் * கலெக்டர் வெளியிட்டு பாராட்டினார் * நூலகங்களுக்கு அனுப்பவும் பரிந்துரை பள்ளிகொண்டா அரசு பள்ளியில் பணிபுரியும் appeared first on Dinakaran.

Related Stories: