ஐடிஐகளில் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

நாமக்கல், செப்.23: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில், காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கைக்கு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் ஐடிஐகளில், 2023-2024ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கைக்கான கடைசி தேதி, 4.0 தொழிற்பிரிவுகளுக்கு வரும் 30ம் தேதி வரையும், என்சிவிடி பிரிவுகளுக்கு 23ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிஐகளில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட் (என்சிவிடி) ஓராண்டு (பெண்கள் மட்டும்) 7 இடங்கள் காலியாக உள்ளன. தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் கணினி பராமரிப்பு (என்சிவிடி) 2 ஆண்டு (பெண்கள் மட்டும்) 8 இடங்கள் காலியாக உள்ளன.

கட்டிட பட வரைவாளர் (என்சிவிடி) 2 ஆண்டு, 5 இடங்கள் காலியாக உள்ளன. அதேபோல், கம்மியர் ஆட்டோ பாடிரிப்பேர் (என்சிவிடி) ஓராண்டு 19 இடங்கள் காலியாக உள்ளன. இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுஃபாக்சரிங் டெக்னீசியன் (இண்டஸ்ட்ரி 4.0) ஓராண்டு 17 இடங்கள் காலியாக உள்ளன. மேற்கண்ட பயிற்சியில் சேர விருப்பம் உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும், கீரம்பூரில் உள்ள அரசினர் ஐடிஐக்கு நேரடியாக சென்று விண்ணப்பித்து, விருப்பமான தொழிற்பிரிவுகளை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெறலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post ஐடிஐகளில் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Related Stories: