1.40 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள்

நாமக்கல், செப்.22: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு 1.40 லட்சம் புத்தகப் பைகள் வழங்கப்படுகிறது. இதற்காக பள்ளிகள் வாரியாக இலவச புத்தக பைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச பாடபுத்தகம், நோட்டுகள், சீருடை, கல்வி உபகரணங்கள் உள்ளிட்டவை ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஏழை, எளிய பெற்றோர்களின் குழந்தைகள் அதிகம் படிக்கும் அரசு பள்ளிகளில், அவர்களின் முன்னேற்றத்துக்காக தமிழக அரசு ஆண்டு தோறும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அரசு பள்ளிகளில் உள்ள வசதிகள், தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாற்றப்பட்டு வருகிறது. பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துவக்கப்பள்ளிகளிலும், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் துவக்கப் பள்ளிகளுக்கு வரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

அரசு பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு இலவச புத்தகப்பைகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்குவதற்காக 1.40 லட்சம் புத்தகப்பைகள், சென்னையில் இருந்து நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு கடந்த வாரம் கொண்டு வரப்பட்டது. இவை சரிபார்க்கப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த பைகளின் மேல் புறத்தில், கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்றை யவை என்ற திருக்குறளும், அதற்கான கருப்பொருளும் அச்சிடப்பட்டுள்ளது. கல்வி சார்ந்த திருக்குறளுடன் 3 வண்ணங்களில், இந்த இந்த புத்தக பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்துக்கு, இந்த ஆண்டு மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 604 புத்தகப் பைகள் வந்துள்ளன. மாவட்டத்தில் உள்ள 1,079 பள்ளிகளை சேர்ந்த 1,40,604 மாணவ, மாணவியருக்கு இந்த பைகள் வழங்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை 27,649 பேருக்கும், 4 முதல் 7ம் வகுப்பு வரை 48,964 பேருக்கும், 8 முதல் 12ம் வகுப்பு வரை 63,991 மாணவ, மாணவியருக்கும் இலவச புத்தக பைகள் வழங்கப்படுகிறது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, புத்தக பைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தில், புத்தக பைகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டு விட்டது. அனைத்து மாணவ, மாணவியருக்கும் தரமான புத்தக பைகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் படித்து வரும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கைக்கு ஏற்ப, புத்தக பைகள் பள்ளிகள் தோறும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.

The post 1.40 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகப்பைகள் appeared first on Dinakaran.

Related Stories: