ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய உறவினர் கைது வங்கி லாக்கரில் 50 சவரன் பறிமுதல் வேலூர் தொரப்பாடியில்

வேலூர், செப்.22: வேலூர் தொரப்பாடியில் ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் நகைகளை திருடிய உறவினரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 50 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வேலூர் தொரப்பாடி ராம்சேட் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (42), ஐடி நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மோகனப்பிரியா (40), அரசுப்பள்ளி ஆசிரியை. பாலாஜி தனது தாயார் உஷாராணி மற்றும் மனைவி, மகளுடன் அடுக்குமாடி வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 3ம்தேதி பாலாஜி வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோவை திறந்து அதில் வைத்திருந்த 50 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடிக்கொண்டு, மிளகாய்பொடியை தூவி விட்டு சென்றிருந்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். தனிப்படை போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில், பாலாஜியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் விற்பனை, பழுது பார்க்கும் வெங்கடேஷ் (40) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்கள் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாலாஜி வீட்டின் பீரோவில் இருந்து 50 சரவன் நகையை திருடியதும், அவற்றை திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி லாக்கரில் வைத்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், வெங்கடேஷை கைது செய்தனர். மேலும் திருவண்ணாமலையில் தனியார் வங்கி லாக்கரில் வைத்திருந்த 50 சவரன் நகையை மீட்டனர். விசாரணையில், வெங்கடேஷ்க்கு குடிநீர் சுத்திகரிக்கும் இயந்திரம் விற்பனையில் வேலை சரியாக இல்லாததால், உறவினர்கள் தன்னை மதிக்கவில்லை என்று திருட்டில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post ஐடி நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய உறவினர் கைது வங்கி லாக்கரில் 50 சவரன் பறிமுதல் வேலூர் தொரப்பாடியில் appeared first on Dinakaran.

Related Stories: