கொலையானவரை அடையாளம் காண 2 தனிப்படை ஆந்திராவுக்கு விரைவு துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல் வேலூர் கோட்டை அகழியில்

வேலூர், செப்.22: கோட்டை அகழியில் கொலை செய்து வீசப்பட்ட வாலிபர் யார் என்று அடையாளம் காண 2 தனிப்படை போலீசார் ஆந்திராவுக்கு விரைந்துள்ளனர். வேலூர் கோட்டை பெரியார் பூங்கா அருகே அகழியில் கடந்த 19ம் தேதி சுமார் 28 வயதுள்ள வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடலில் கல்லை கட்டி, தரைவிரிப்பால் மூட்டை கட்டிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். உடல் அழுகிய நிலையில் இருந்ததால் உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இக்கொலை தொடர்பாக டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் 3தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையானவர் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சிசிடிவி கேமராக்களில் பதிவான பதிவுகளை சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்களின் விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுகப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை எந்தவிதமான தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் அவர்களின் அங்க அடையாளங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட2 தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். இறந்தவரின் கையில் சித்ரா என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. இதை வைத்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கொலையானவரை அடையாளம் காண 2 தனிப்படை ஆந்திராவுக்கு விரைவு துப்பு கிடைக்காமல் போலீசார் திணறல் வேலூர் கோட்டை அகழியில் appeared first on Dinakaran.

Related Stories: