கிராம ஊராட்சி செயலாளர்கள் நியமனம் செய்வதற்கு புதிய நடைமுறை பணி வரன்முறைகள் குறித்து அரசு உத்தரவு

வேலூர், செப்.22: கிராம ஊராட்சி செயலாளர்கள் நியமனம் செய்வதற்கான புதிய நடைமுறைகள், விதிமுறைகள், பணி வரன்முறைகள் வகுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கிராம ஊராட்சிகளில் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அலுவலர்களாக கிராம ஊராட்சி ெசயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கிராம சபா கூட்டம் நடத்துதல், வரிவசூலித்தல், நூறு நாள் பணி மேற்பார்வை உட்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் பலர் 10ம் வகுப்பு படிக்காதவர்கள் கூட கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நியமிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பணி நீக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது புதிய கிராம ஊராட்சி செயலர்களை நியமனம் செய்வது ெதாடர்பாக தமிழக அரசு புதிய விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கிராம ஊராட்சி செயலாளர்கள் நியமிக்க போட்டித் தேர்வு முறை பின்பற்றப்படும். இந்தத் தேர்வுக்கு என கலெக்டர் தலைவராகக் கொண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்படும். இந்தக் குழுவில் கூடுதல் ஆட்சியர், ஊராட்சித் துறை உதவி இயக்குநர், ஆட்சியரின் தனி உதவியாளர் உறுப்பினர்களாக இருப்பர்.

ஊராட்சி செயலாளர்கள் பதவிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் கிராம ஊராட்சிக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும். ஊராட்சி செயலர்கள் பதவிக்கு வருபவர்களின் வயது 18 நிறைவடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகும். ஒவ்வொரு ஆண்டிலும் ஜூலை 1ம் தேதி நிலவரப்படி வயது வரம்பு கணக்கிடப்படும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 34 ஆகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கான அதிகபட்ச வயது வரம்பு 37 ஆகும். ஊராட்சி செயலாளர்கள் பதவிக்கான தேர்வை எழுத விரும்புவோர் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிராம ஊராட்சி செயலாளர்களை ஒரு கோட்டத்துக்குள்ளே பணியிட மாற்றம் செய்யும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அதிகாரிக்கு உள்ளது. அதேசமயம், மாவட்டத்துக்குள் பணியிட மாற்றம் செய்ய ஆட்சியரின் தனி உதவியாளருக்கும், ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநருக்கும் அதிகாரம் உள்ளது.

பெண் ஊராட்சி செயலாளர்கள் கர்ப்பிணியாக இருந்தால், அவர்களுக்கு ஊதியத்துடன் ஓராண்டு பேறுகால விடுப்பு அளிக்கப்படும். ஊராட்சி செயலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சி செயலாளரும், அரசு பணியாளரும் இணைந்து ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடும்பட்சத்தில் அவர்கள் மீது ஊராட்சி சட்டப் பிரிவு மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post கிராம ஊராட்சி செயலாளர்கள் நியமனம் செய்வதற்கு புதிய நடைமுறை பணி வரன்முறைகள் குறித்து அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: