இந்நிலையில் நீட் தேர்வு தந்த மனஅழுத்தம் காரணமாக 2017ம் ஆண்டு அரியலூரை சேர்ந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 2018ம் ஆண்டில் விழுப்புரம் பிரதீபாவும் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவ மாணவியருக்கு 7.5 % சதவீத இட ஒதுக்கீடு முறையை தமிழ்நாடு அரசு கொண்டு வந்தது. ஆனாலும், நீட் தேர்வு முறையை ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீட் தேர்வுக்கு எதிர்ப்புக் குரல் நீடித்துவரும் நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு கட்ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்கி மருத்துவ கவுன்சில் குழு அறிவித்துள்ளது. மேலும், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு முடித்துவிட்டு முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் பெறும் கட் ஆஃப் மதிப்பெண்ணைக் கொண்டே முதுநிலை படிப்புக்கு இடங்கள் கிடைக்கும். தற்போது இந்த கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக குறைத்துள்ளது இந்திய மருத்துவ கவுன்சில் கமிட்டி. இதற்கு முக்கிய காரணம், நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப் படிப்புக்கான இடங்களில் மாணவ மாணவியர் இந்த ஆண்டு சேர விருப்பம் காட்டவில்லை.
அதனால் நிறைய இடங்கள் காலியாக உள்ளன. தனியார் கல்லூரிகளுக்கும் வருவாய் இல்லை. அதனால், தனியார் கல்லூரிகளின் அனைத்து இடங்களையும் நிரப்புவதற்காகவே கட் ஆஃப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவ கவுன்சில் குழு நேற்று வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 2023ம் ஆண்டுக்கான முதுநிலை படிப்பிற்குரிய கட் ஆப் மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மத்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் குறைத்துள்ளது. இது அனைத்து வகைகளிலும் பொருந்தும். முதுநிலை மருத்துவ மேற்படிப்புகாக புதிதாக பதிவு செய்பவர்கள் மற்றும் 3ம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்க உள்ளவர்களுக்கும் மற்றும் தகுதி பெற்றவர்களுக்கும் மீண்டும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுகிறது.
புதியவர்கள் இதை பயன்படுத்தி 3ம் சுற்றும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். ஏற்கனவே பதிவு செய்து இருப்பவர்கள் மீண்டும் பதிவு செய்ய தேவை இல்லை. இருப்பினும் விருப்ப இடங்களை திருத்தி அமைக்க அனுமதிக்கப்படுவார்கள். முதுநிலை படிப்பு 3ம் கட்ட கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை மருத்துவ கவுன்சிலிங் விரைவில் வெளியிடும். மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை மருத்துவ கவுன்சிலிங் குழுவின் இணையதளத்தில் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மாணவ மாணவியருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு கல்வியாளர்கள், சமூக அமைப்புகளை சேர்ந்தவர்களும், அரசியல் தலைவர்களும் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த அறிவிப்பால் மாணவ மாணவியர் குழப்பமடைந்துள்ளனர்.
நீட் தேர்வின் பலன் ‘பூஜ்ஜியம்’ முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: நீட் தேர்வின் பலன் என்னவென்றால், ‘‘பூஜ்ஜியம்’’தான் என்பதை ஒன்றிய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தகுதி மதிப்பெண் பூஜ்ஜியம்தான் என்று வரையறுப்பதன் மூலமாக நீட் என்றால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு(National Eligiblity cum Entrence Test)என்பதில் தகுதிக்கு(Eligiblity)க்கு பொருள் கிடையாது என்பதை அவர்கள் ஒப்புக் கொண்டுவிட்டார்கள். கோச்சிங் சென்டர்களில் சேருங்கள், நீட் தேர்வுக்கு பணம் கட்டுங்கள் போதும் என்றாகிவிட்டது. நீட்= 0 என்றாகிவிட்டது. இதைத்தான் நாங்கள் இத்தனை ஆண்டுகளாக சொல்லி வந்தோம். எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கின்ற. இரக்கமே இல்லாமல் ஒன்றிய அரசு இருந்து விட்டு இப்போது இப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். நீட் என்ற பலிபீடத்தைக் கொண்டு உயிர்களை பறிக்கும் காரணத்துக்காகவே இந்த பாஜ ஆட்சியை அகற்றியாக வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
The post ‘ஜீரோ’ மார்க் எடுத்தால் எம்எஸ், எம்டி சீட் கிடைக்கும்: ஒன்றிய அரசு அறிவிப்புக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.