தொழில்நுட்ப கோளாறால் நடந்த ருசிகர சம்பவம்; கார் டிரைவர் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட்: 34 நிமிடங்கள் கோடீஸ்வரராக இருந்த அதிசயம்

சென்னை: தனியார் வங்கியில் இருந்து கார் டிரைவர் ஒருவரின் வங்கி கணக்கில், ₹9 ஆயிரம் கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால் 34 நிமிடங்கள் வரை கார் டிரைவர் கோடீஸ்வரராக இருந்துள்ளார். சிறிது நேரத்தில் அந்த பணத்தை வங்கி திரும்ப பெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார்(28). டிப்ளமோ இன்ஜினியரான இவர், கார் டிரைவராக உள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் தங்கி கார் ஓட்டி வருகிறார். இவருக்கு பழனியில் உள்ள தனியார் வங்கி கிளையில் கணக்கு உள்ளது. தற்போதைய சூழலில் இவரது வங்கி கணக்கில் 105 ரூபாய் மட்டும் இருந்தது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி மாலை 3 மணிக்கு தனியார் வங்கியில் உள்ள இவரது கணக்கிற்கு பணம் வரவு வைக்கப்பட்டது. தன் வங்கி கணக்கிற்கு எவ்வளவு வந்துள்ளது என்பதை கணக்கிடவே திணறி உள்ளார். கடைசியில 9 ஆயிரம் கோடி தன் வங்கி கணக்கில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ராஜ்குமார் தனது நண்பரிடம் கூறியுள்ளார். அவர் உடனே எனக்கு முதலில் ₹1000 பணம் அனுப்பு அதன்பிறகு இது உண்மையா அல்லது மோசடி நபர்களின் செயலா என்று பார்ப்போம் என்று ராஜ்குமாருக்கு யோசனை கொடுத்துள்ளார். அதன்படி ராஜ்குமார் ஆன்லைன் மூலம் முதலில் தனது நண்பர் வங்கி கணக்கிற்கு ₹1000 பணத்தை அனுப்பியுள்ளார். அந்த பணம் அவரது நண்பர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதை கண்டு கார் டிரைவர் ராஜ்குமார் உற்சாகமடைந்தார். பல ஆயிரம் கோடி பணத்திற்கு சொந்தக்காரர் என்று மகிழ்ச்சியடைந்தார். பிறகு மீண்டும் தனது நண்பர் வங்கி கணக்கிற்கு ₹20 ஆயிரம் பணத்தை அனுப்பியுள்ளார். அந்த பணமும் அவரது நண்பர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

பணம் வந்த 34 நிமிடங்கள் வரை ராஜ்குமார் மகிழ்ச்சியாக இருந்தார். பணம் வரவு வைக்கப்பட்ட 34 நிமிடத்தில் ₹9 ஆயிரம் கோடி பணத்தில் ₹21 ஆயிரம் போக மீதமுள்ள ₹89999979,105.18 கோடி பணத்தை கார் டிரைவர் ராஜ்குமாருக்கு எந்தவித முன்அறிவிப்பும் எதுவும் இன்றி டெபாசிட் செய்த மொத்த பணத்தையும் வங்கி திரும்ப பெற்று கொண்டது. அதைதொடர்ந்து, வங்கியில் இருந்து ராஜ்குமாருக்கு அழைப்பு செய்து தவறுதலாக ₹9 ஆயிரம் கோடி பணம் வரவு வைக்கப்பட்டது. அந்த பணத்தில் இருந்து நீங்கள் ஆன்லைன் மூலம் மாற்றிய ₹21 ஆயிரம் பணத்தை எப்போது திருப்பி தர போகிறீர்கள் என்ற கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அதற்கு ராஜ்குமார், எனது வங்கி கணக்கில் ₹9 ஆயிரம் கோடி டெபாசிட் செய்தது நீங்கள், அந்த பணத்தை திரும்ப எடுத்த போது எனக்கு முன் அறிவிப்பு எதுவும் கொடுக்காமல் பணத்தை எனது வங்கி கணக்கில் இருந்து நீங்கள் எப்படி எடுக்கலாம், இதுகுறித்து நான் சென்னை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்க போகிறேன் என்ற கூறியுள்ளார்.

உடனே வங்கி அதிகாரிகள், சார் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துவிட்டது. நீங்கள் புகார் எல்லாம் அளிக்க வேண்டாம். சென்னை தி.நகரில் உள்ள வங்கி அலுவலத்திற்கு வாங்க சார் பேசலாம் என்று கூறியுள்ளனர்.

வங்கி அதிகாரிகள் அழைப்பை ஏற்று ராஜ்குமார் வங்கிக்கு சென்று உயர் அதிகாரிகளை சந்தித்துள்ளார். அப்போது இது தவறாக மாற்றப்பட்டுவிட்ட பணம், நீங்கள் ₹9 ஆயிரம் கோடியில் ₹21ஆயிரம் பணம் எடுத்தது கூட எங்களுக்கு தரவேண்டாம். வங்கி மீது புகார் மட்டும் கொடுக்க வேண்டாம் என்று சமாதானம் செய்துள்ளனர். அதோடு இல்லாமல் நீங்கள் கார் டிரைவர் என்பதால், நீங்கள் சொந்தமாக கார் வங்க லோன் மற்றும் பர்சனல் லோன் கூட நாங்கள் தருகிறோம் என்று கூறி சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர்.

The post தொழில்நுட்ப கோளாறால் நடந்த ருசிகர சம்பவம்; கார் டிரைவர் வங்கி கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி டெபாசிட்: 34 நிமிடங்கள் கோடீஸ்வரராக இருந்த அதிசயம் appeared first on Dinakaran.

Related Stories: