மேலும், கனடாவில் அதிகரித்து வரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள், அரசியல் ரீதியாக மன்னிக்கப்பட்ட வெறுப்பு குற்றங்கள் மற்றும் கிரிமினல் வன்முறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் அங்கு பயணம் செல்ல இருப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்தியா நேற்று முன்தினம் அறிவுறுத்தியது. இந்நிலையில், இந்திய விசா கோரும் கனடா நாட்டவரின் விண்ணப்பங்களை முதல் கட்ட ஆய்வு செய்யும் பிஎல்எஸ் தனியார் நிறுவனம் அதன் இணையதளத்தில், அடுத்த அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் விசா சேவைகளை செப்டம்பர் 21, 2023 முதல் இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பை சில மணி நேரங்களில் திரும்ப பெற்ற பிஎல்எஸ் நிறுவனம் பின்னர் மீண்டும் அதனை இணையதளத்தில் பதிவிட்டது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷியிடம் தூதரக பிரச்சினை குறித்து இந்தியா தனது கருத்துகளை பகிர்ந்துள்ளதா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “நிஜார் குறித்த எந்த தகவல்களையும் கனடா அரசு இந்தியாவிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தியா தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. கனடாவில் உள்ள தூதரகம் மற்றும் தூதரக அலுவலகங்களில் பாதுகாப்பு காரணங்கள் கருதி விசா வழங்கும் நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.
இதனிடையே, ட்ரூடோவின் ஆளும் கட்சியின் இந்திய வம்சாவளி எம்பி சந்திர ஆர்யா தனது எக்ஸ் தளத்தில், “கடந்த சில நாட்களுக்கு முன் காலிஸ்தான் இயக்கத்தின் கனடா தலைவர் மற்றும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் நடத்திய கூட்டத்தின் போது கனடா இந்துக்கள் இந்தியாவுக்கு திரும்பி போகும்படி கூறி நிஜாரின் வழக்கறிஞரான குர்பத்வந்த் சிங் தாக்கினார். இந்த தாக்குதலுக்கு பின், கனடாவில் உள்ள இந்துக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்துகளுக்கு எதிரான சம்பவங்கள் குறித்து அப்பகுதியில் உள்ள போலீசாருக்கு தெரிவித்து கொள்ளுங்கள்,” என்று பதிவிட்டுள்ளார்.
அதே போன்று, இந்தியாவில் உள்ள கனடா தூதரக அதிகாரிகளில் சிலருக்கு சமூக வலைதளங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, அங்கு பணியாற்றும் தூதரக அதிகாரிகளுக்கு இந்திய அரசு பாதுகாப்பு அளிக்கும்படி கனடா அரசு கேட்டு கொண்டுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் உள்ள தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை தற்காலிகமாக குறைக்க முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்று சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல், “இந்தியா, கனடா அரசுகள் இடையிலான பதற்றத்தினால் கனடாவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் சீக்கியர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இரு அரசுகளும் விரைந்து தீர்வு காண வேண்டும்,” என்று வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
* தகவல் திரட்டும் என்ஐஏ
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் கடந்த மார்ச் மாதம் காலிஸ்தான் கொடியை நிறுவி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை சுவரில் எழுதி, இந்திய தேசியக்கொடியை அவமதித்து, தாக்குதல் நடத்திய 10 காலிஸ்தான் தீவிரவாதிகளின் படங்களை வெளியிட்ட தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் அவர்கள் குறித்த தகவல்களை பொதுமக்களிடம் கேட்டு விசாரித்து வருகின்றனர். தகவல்கள் கிடைத்த உடன் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
The post பாதுகாப்பு கருதி கனடா நாட்டினருக்கு விசா தருவது தற்காலிகமாக நிறுத்தம்: இந்திய வெளியுறவு அமைச்சகம் அதிரடி appeared first on Dinakaran.