பதற்றம் நீடிக்கும் நிலையில் கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை

ஒட்டாவா: காலிஸ்தான் தீவிரவாதி நிஜார் சுட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா- கனடா இடையேயான பதற்றம் நீடிக்கும் நிலையில், அங்கு மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டுள்ளார். கனடாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள சீக்கிய கலாச்சார மையத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனடாவின் வின்னிபெக் நகரில், பஞ்சாபில் தேடப்பட்டு வரும் மற்றொரு காலிஸ்தான் தீவிரவாதியான சுக்தூல் சிங் என்ற சுக்கா துன்கே மர்மநபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் உள்ள துன்கே காலான் கிராமத்தை சேர்ந்த இவர் கடந்த 2017ம் ஆண்டு போலி ஆவணங்களுடன் கனடா சென்றுள்ளார். அங்கு கனடாவில் செயல்படும் அர்ஷ் தல்லா கும்பல், லக்கி பாடீல் கும்பல், மலேசியாவின் ஜேக்பால் சிங் கும்பல்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். இவர்களுடன் இருந்த வெளிநாட்டு தொடர்பை பயன்படுத்தி உள்ளூர் அடியாட்களை கொண்டு ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றங்களை இவர் செய்து வந்ததாக பஞ்சாப் போலீசார் தெரிவித்தனர். அவர் மீது பஞ்சாபில் பல கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

* 2 கும்பல்கள் பொறுப்பேற்பு
சுக்தூல் சிங் கொலைக்கு லாரன்ஸ் பிஸ்னோய், ஜக்கு பகவான்பூர்யா ஆகிய 2 அடியாள் கும்பல்கள் பொறுப்பேற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, பஞ்சாபில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 1,200-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று காலை 7 மணி முதல் 5,000-க்கும் மேற்பட்ட மாநில போலீசார் அந்த கும்பல்களில் உள்ளவர்களை தேடி தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

The post பதற்றம் நீடிக்கும் நிலையில் கனடாவில் மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டு கொலை appeared first on Dinakaran.

Related Stories: