அமலாக்கத்துறைக்கு எதிரான மெகுல் சோக்ஸியின் மனுக்கள் தள்ளுபடி: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கக் கோரிய அமலாக்க இயக்குனரகத்தின் விண்ணப்பத்தை எதிர்த்து தொழிலதிபர் மெகுல் சோக்ஸி தாக்கல் செய்த மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,500 கோடிக்கு மேல் மோசடி செய்த பிரபல தொழில் அதிபர் மெகுல் சோக்ஸி இந்தியாவை விட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அவரை தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி என்று அறிவிக்கவும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய அனுமதி கேட்டும் அமலாக்கத்துறை கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் மனுத்தாக்கல் செய்தது.

இந்த மனுவை எதிர்த்து 2019 ஆகஸ்ட்டில் மெகுல் சோக்ஸி சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சாரங் கோட்வால் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி சாரங் கோட்வால்,’ அமலாக்கத்துறை தாக்கல் செய்த விண்ணப்பத்தில் எந்த குறைபாடும் இல்லை. தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டப் பிரிவு 4 மற்றும் விதி 3ன் கீழ் தேவையான அனைத்து நடைமுறைகளும் சரியாகப் பின்பற்றப்படுவதைக் காண்கிறேன். எனவே மெகுல்சோக்ஸி மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று உத்தரவிட்டார்.

The post அமலாக்கத்துறைக்கு எதிரான மெகுல் சோக்ஸியின் மனுக்கள் தள்ளுபடி: மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: