வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் * வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் * பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

வேலூர், செப்.21: வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று நடந்தது. வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். டு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வழக்கமான உற்சாகத்துடன் 18ம் ேததி கொண்டாடப்பட்டது. வீடுகள் மட்டுமின்றி பொதுவெளிகளிலும் பிரமாண்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதனால் பண்டிகை களைக்கட்டியது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், கே.வி.குப்பம், அணைக்கட்டு என நகரம் தொடங்கி சிறு கிராமம் வரை வீதிகளில் சிறிய விநாயகர் சிலைகள் முதல் 10 அடி உயரமுள்ள பிரமாண்ட விநாயகர் சிலைகள் என மொத்தம் ஆயிரத்துக்கு மேற்பட்டவை வைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன. இதில் இந்து முன்னணி சார்பில் 500 சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அன்னதானம், கலை நிகழ்ச்சிகள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் பல இடங்களில் நடந்தன.

இந்நிலையில் விநாயகர் விஜர்சன ஊர்வலம் நேற்று வேலூர் மாவட்டத்தில் பல இடங்களில் நடந்தன. வேலூரில் இந்து முன்னணி சார்பில் முக்கிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று மதியம் 12 மணியளவில் சத்துவாச்சாரி கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகில் இருந்து மேளதாளம் முழங்க புறப்பட்டது. கொணவட்டம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எல்.சம்பத் தலைமையில் நாராயணி மருத்துவமனை இயக்குனர் மற்றும் அறங்காவலர் பாலாஜி விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்தார். தொடர்ந்து, நாதஸ்வரம், செண்டைமேளம், தாரை தப்படை, ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய விஜர்சன ஊர்வலத்துக்கு கோட்ட பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட துணைத்தலைவர்கள் சீனிவாசன், தனசேகர், ரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை புரம் இயக்குனர் சுரேஷ்பாபு, இந்து முன்னணி மாநில துணை தலைவர் அரசுராஜா ஆகியோர் தொடங்கி வைத்து பேசினர். இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷ் வரவேற்றார்.இதில் அகில பாரதீய சன்னியாசிகள் சங்க இணை செயலாளர் சிவராமானந்தா, தோப்பாசாமி மடம் தேவபிரகாசானந்தா, அப்பாஜி, வாராகி குருஜி, வாராகிதாசர், வாராகிதாசன், செங்காநத்தம் பகவதி சித்தர், கோட்ட அமைப்பாளர் ராஜேஷ் உட்பட பலர் வாழ்த்தி பேசினர்.

விநாயகர் சிலைகளுடன் புறப்பட்ட ஊர்வலம் மதியம் 1.30 மணியளவில் காகிதப்பட்டறை வழியாக சைதாப்பேட்டை முருகன் கோயில் வந்தது. அங்கு விநாயகர் சிலைகளுக்கு மீண்டும் பூஜைகள் நடந்தன. தொடர்ந்து சந்தா சாகிப் மசூதி, மெயின் பஜார், கிருபானந்தவாரியார் சாலை, கமிசரி பஜார், தெற்கு காவல் நிலையம், அண்ணா கலையரங்கம், கோட்டை சுற்றுச்சாலை, முள்ளிப்பாளையம், சேண்பாக்கம், கொணவட்டம் வழியாக சதுப்பேரியை மாலை 6 மணியளவில் அடைந்தன. ஊர்வலமாக வந்த விநாயக பெருமானை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அங்கு சிலைகள் ஒவ்வொன்றாக கிரேன்கள் மூலம் எடுத்து சதுப்பேரியில் சிலை கரைப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தற்காலிக குளத்தில் கரைக்கப்பட்டன. இதுதவிர நகரில் ஆங்காங்கே பகுதி விழாக்குழுவினர், பிற அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகளும், கொணவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்ட சிலைகள் என மொத்தம் 300க்கும் மேற்பட்ட சிலைகள் சதுப்பேரிக்கு கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலை ஊர்வல பாதையில் டிஐஜி முத்துசாமி, எஸ்பி மணிவண்ணன் தலைமையில் தனித்துணை ஆட்சியர் தனஞ்செழியன், தாசில்தார் செந்தில் ஆகியோர் தலைமையில் 1,800க்கும் மேற்பட்ட போலீசார், சிறப்பு காவல் போலீசார், தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படையினர், ஊர்க்காவல் படையினர், வஜ்ரா வேன் அடங்கிய பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஊர்வலப்பாதை முழுவதும் காவல்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. கொணவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தை கோட்ட தலைவர் மகேஷ் தொடங்கி வைத்தார். அதேபோல் மாவட்டத்தில் பேரணாம்பட்டு நகரில் மாலை 3 மணிக்கும், காட்பாடி ஒன்றிய பகுதியில் மாலை 4 மணிக்கும் விநாயகர் சிலை விஜர்சன ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது.

The post வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து மேளதாளம் முழங்க விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் * வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் தரிசனம் * பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது appeared first on Dinakaran.

Related Stories: