செய்யாறு, செப்.21: செய்யாறு, வந்தவாசி அருகே இருவேறு கோர விபத்துகளில் காஞ்சிபுரம், செங்கல்பட்டை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 3 பேர் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் படுகாயமடைந்த தாய், மகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் டவுன், சர்வ தீர்த்தக்குளம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(40). இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஞானப்பிரியா(35). இவர்களது மகள் திலக்ஷனா(6). இந்நிலையில், ரமேஷின் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, நாகனூர் கிராமத்தில் நேற்று முன்தினம் கோயில் திருவிழா நடந்தது. இதற்காக குடும்பத்துடன் சென்றிருந்த ரமேஷ் திருவிழா முடிந்ததும், நேற்று காலை பைக்கில் தனது மனைவி, மகளுடன் காஞ்சிபுரத்திற்கு புறப்பட்டார்.
தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வந்தவாசி- காஞ்சிபுரம் சாலையில் உள்ள தேத்துறை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, எதிரே காஞ்சிபுரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ் மீது எதிர்பாராதவிதமாக இவர்களது பைக் மோதியது. இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தனர். இதில் ரமேஷ், திலக்ஷனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
உடனே, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஞானப்பிரியாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் ஞானப்பிரியா பரிதாபமாக இறந்தார்.
இதற்கிடையில் தகவலறிந்த செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன், தூசி இன்ஸ்பெக்டர் குமார், எஸ்ஐ கன்னியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர், ரமேஷ், திலக்ஷனா ஆகியோரது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து, ரமேஷின் தம்பியான போலீஸ்காரர் பார்த்தீபன்(32) அளித்த புகாரின்பேரில் அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். கோயில் திருவிழாவுக்கு சென்று திரும்பியபோது நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, எலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசு(40). இவர் சென்னை திருப்போரூர் அரசு போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி(35), மகள் பிரசாந்தினி(5), மகன் பிரவீன்(4).
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் வசிக்கும் மீனாட்சியின் சகோதரி தேவி என்பவரது குழந்தையின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள நேற்று முன்தினம் இளவரசு குடும்பத்தினர் காரில் வந்தனர். பின்னர், நிகழ்ச்சி முடிந்ததும் இரவு அனைவரும் காரில் வீடு திரும்பினர். காரை இளவரசு ஓட்டி சென்றார். தொடர்ந்து, வந்தவாசி- மேல்மருவத்தூர் நெடுஞ்சாலையில் சாலவேடு முருகன் கோயில் அருகே சென்றபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட இளவரசு காரை இடது புறமாக திருப்பி உள்ளார். அப்போது, திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இளவரசு குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். விரைந்து வந்த அப்பகுதி மக்கள் 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் பிரவீன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, ஆபத்தான நிலையில் இருந்த இளவரசு, பிரசாந்தினி ஆகிய இருவரையும் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இளவரசு பரிதாபமாக பலியானார். தொடர்ந்து, சிறுமி பிரசாந்தினி மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மீனாட்சிக்கு தொடர்ந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை, மகன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
The post ஒரே குடும்பத்தில் 3 பேர் உட்பட 5 பேர் பரிதாப பலி * தாய், மகளுக்கு படுகாயத்துடன் சிகிச்சை * காஞ்சிபுரம், செங்கல்பட்டை சேர்ந்தவர்கள் செய்யாறு, வந்தவாசி அருகே கோர விபத்து appeared first on Dinakaran.