விபத்தில் காயமடைந்த ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஷ்வரனுக்கு அமைச்சர் உதயநிதி நிதியுதவி

சென்னை: விபத்தில் காயமடைந்த ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஷ்வரனுக்கு தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார். மதுரை மாவட்டம், கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஸ்வரன் கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தேசிய அளவில் கடந்த ஜூலை மாதம் கர்நாடக மாநிலம், பெல்லாரியில் நடைபெற்ற தேசிய கேடட் ஜூடோ போட்டியில் கலந்து கொண்டு ஐந்தாம் இடம் பெற்றிருந்தார்.

மேலும், மாநில அளவிலான போட்டிகள் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப்பதக்கங்கள் மற்றும் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். இந்தநிலையில், கடந்த ஜூலை 26ம் தேதி மதுரையில் ஜூடோ பயிற்சிக்காக செல்லும் போது ஏற்பட்ட விபத்தில் காயமுற்று இடது காலில் ஒரு பகுதியை இழந்துள்ளார்.

அந்தவகையில், பல்வேறு நிகழ்ச்சிக்களுக்காக மதுரை சென்றிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் விளையாட்டு வீரர் பரிதி விக்னேஷ்வரனை நேரில் சந்தித்து தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் ரூ.2 லட்சத்துக்கான நிதியுதவியினை வழங்கினார். இந்த நிகழ்வின்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post விபத்தில் காயமடைந்த ஜூடோ விளையாட்டு வீரர் பரிதி விக்னேஷ்வரனுக்கு அமைச்சர் உதயநிதி நிதியுதவி appeared first on Dinakaran.

Related Stories: