மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் அரசியலுக்கு பயன்படுத்துகிறது பாஜக: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

டெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் அரசியலுக்கு பயன்படுத்துகிறது பாஜக என கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு வைத்துள்ளார். நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் மகளிருக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, 30 ஆண்டுகளுக்கு மேலான இழுபறிக்குப் பின், தற்போது நிறைவேறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கான மசோதா, நேற்று நடந்த நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றத்தில் தாக்கலான முதல் மசோதா என்ற சிறப்பை பெற்றது. இந்த மசோதா சட்டமானாலும், அடுத்து வரும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல் அல்லது லோக்சபா தேர்தலில் நடைமுறைக்கு வராது. தற்போதைய சூழ்நிலையில், 2029ல்தான் மகளிர் இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து மக்களவையில் கனிமொழி எம்.பி. கூறியதாவது,

கனிமொழி பேசும் முன்பே பாஜகவினர் கூச்சல்

கனிமொழி பேசத் தொடங்கும் முன்பே பாஜகவினர் கூச்சலிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பாஜகவினர் கூச்சலிட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

இதுதான் பாஜக பெண்களை மதிக்கும் முறையா என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். கனிமொழி பேசத் தொடங்கும் முன்பே கூச்சலிடுவது ஏன் என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி.பாஜகவினர் பெண்களை மதிக்கும் லட்சணம் இதுதான் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் அரசியலுக்கு பயன்படுத்துகிறது பாஜக என கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு வைத்தார்.

ரகசியமாக மசோதா கொண்டுவரப்பட்டது ஏன்?

அனைத்து தரப்பினரும் இணைந்து நிறைவேற்ற வேண்டிய மசோதாவில் பாஜக அரசியல் செய்வது துரதிருஷ்டவசமானது. பெண்களை மதிப்பதுபோல் ஆண்கள் நடந்து கொள்வது ஏமாற்று வேலை என்று பெரியார் கூறியிருந்தார். பெரியார் கூறியதை மேற்கோள்காட்டி மக்களவையில் கனிமொழி எம்.பி. பேசினார். பாஜகவினரின் செயலை பார்க்கும்போது பெரியார் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த இடஒதுக்கீடு மசோதாவில் எந்த நிபந்தனையும் இல்லை. ஆனால் தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறைக்கு பிறகே மகளிர் இடஒதுக்கீடு அமலாகும். அனைத்து தரப்பினரும் ஆலோசித்து கொண்டுவர வேண்டிய -மசோதாவை பாஜக ரகசியமாக கொண்டுவந்தது ஏன்? எனவும் கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சரின் எதிர்ப்பை மக்களவையில் பதிவு செய்தார்:

மறுவரையறைக்கு பிறகே இடஒதுக்கீடு அமல் என்ற நிபந்தனைக்கு மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என கனிமொழி தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் எதிர்ப்பை நாடாளுமன்றத்தில் பதிவுசெய்தார் கனிமொழி எம்.பி. மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள தென்மாநில மக்கள் வஞ்சிக்கப்படும் ஆபத்து இருப்பதாக முதல்வர் கூறியுள்ளார். தென்னிந்திய மக்களின் அச்சத்தை பிரதமர் மோடி போக்கவேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மகளிருக்கு வாக்களித்து ஒருவரை தேர்ந்தெடுக்க உரிமை மட்டுமல்லாமல், தாங்கள் தேர்வாவதற்கான உரிமையும் இருக்க வேண்டும். சிலியின் முன்னாள் அதிபர் டஸிலேவின் உரையை மேற்கோள்காட்டி திமுக எம்.பி. கனிமொழி பேசினார். பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைவிட மகளிருக்கு -பிரதிநிதித்துவம் இந்தியாவில் குறைவாக உள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்துக்குப் பின், சென்னை, மும்பை ராஜதானியில் 1919ல் மகளிருக்கு வாக்குரிமை.

தமிழ்நாட்டில் நீதிக்கட்சி 1921, மே 10ம் தேதி மகளிருக்கு வாக்குரிமை அளிக்கும் தீர்மானத்தை முதன்முறையாக நிறைவேற்றியது. 1927-ல் இந்தியாவின் முதலாவது பெண் எம்.எல்.ஏ.வான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தமிழ்நாட்டில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவதாசி முறையை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றியவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. மகளிர் வாக்குரிமை பெற்று 100 ஆண்டுகள் கடந்த பிறகும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. 1929ல் செங்கல்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பெரியார் தலைமையில் மகளிர் உரிமைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, அரசியலில் மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 1929-ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

 

The post மகளிர் இடஒதுக்கீடு மசோதாவையும் அரசியலுக்கு பயன்படுத்துகிறது பாஜக: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: