பழைய இறைச்சியை பயன்படுத்தினால் ஓட்டல்களின் உரிமம் ரத்து

 

லால்குடி, செப். 20: லால்குடி நகராட்சி பகுதியில் உள்ள அசைவ ஓட்டல்களில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்களில் ஷவர்மா இறைச்சி தயாரித்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓட்டல்களில் பழைய இறைச்சிகளை பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதோடு ஓட்டல் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

லால்குடி நகராட்சி பகுதிகளில் நகராட்சி ஆணையர் குமார் மற்றும் அலுவலர்கள் திருச்சி சாலையில் உள்ள இறைச்சி கடைகள், அசைவ உணவு கடைகள், பூவாளூர் சாலையில் உள்ள அசைவ உணவு கடைகள், நகர பகுதியில் உள்ள அசைவ ஓட்டல்களில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அசைவ உணவு கடைகளில் சமையல் கூடத்திலும், சமையலுக்கு பயன்படுத்தப்படும் இறைச்சிகளையும், சமையலுக்கு பயன்படுத்தி சமைத்து வைத்திருந்த இறைச்சிகளையும் சோதனை செய்தும் கடைகளின் சுகாதாரத்தையும் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் ஷவர்மா தயார் செய்து விற்பனை செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. ஷவர்மா இறைச்சி தயாரித்து விற்பனை செய்யக்கூடாது. இறைச்சிகளை அன்றைக்கே பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள இறைச்சிகளை பதப்படுத்தி அடுத்த நாள் பயன்படுத்தக்கூடாது. இதுபோல ஓட்டலில் பழைய இறைச்சிகளை பயன்படுத்தி மக்களுக்கு வழங்குவதை சோதனையில் கண்டறியப்பட்டால் ஓட்டல் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். கடை உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி ஆணையர் எச்சரித்தார்.

The post பழைய இறைச்சியை பயன்படுத்தினால் ஓட்டல்களின் உரிமம் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: