வேலூர், செப்.20: வேலூர் அடுத்த கணியம்பாடியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வந்த கணவன், மனைவி அறையில் சூழ்ந்த புகையில் சிக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தனர். வேலூர் மாவட்டம் கணியம்படி புதூரை சேர்ந்தவர் தெய்வசிகாமணி(40). இவரது மனைவி அமுலு(35). மகள்கள் சந்தியா(15), சினேகா(13), மகன் அரவிந்த்(12). தெய்வசிகாமணியும், அமுலுவும் அதே ஊரில் ஏரியில் இயங்கி வரும் புதூரை சேர்ந்த பழனி என்பவரின் செங்கல் சூளையில் தங்கி கூலி வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு செங்கல் சூளையில் செங்கற்களை வேக வைப்பதற்காக தீ மூட்டப்பட்டிருந்ததால், பாதுகாப்புக்காக சூளையை ஒட்டியுள்ள அறையில் தம்பதியினர் தங்கியுள்ளனர். மேலும் செங்கல் சூளையில் செங்கற்கள் வேக வைப்பதற்காக மூட்டப்பட்டிருந்த தீ அணையாமல் இருப்பதற்காக சூளையை ஒட்டியுள்ள அறையுடன் இணைத்து தார்பாய் போட்டு சூளை மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலூர், கணியம்பாடி உட்பட மாவட்டம் முழுவதும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தார்ப்பாயால் மூடப்பட்டிருந்த சூளையில் வைக்கப்பட்டிருந்த தீ அணைந்தது. இதனால் கிளம்பிய புகை குபு, குபுவென பரவி சூளை மட்டுமின்றி அதை ஒட்டியுள்ள சிறிய அறையிலும் சூழ்ந்தது. இதனால் தூக்கத்தில் இருந்த கணவனும், மனைவியும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அலறினர். ஆனால் நள்ளிரவு என்பதால் இவர்களது அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.
இதனால் காப்பாற்ற யாருமின்றி கணவனும், மனைவியும் அறையிலேயே மயங்கினர். நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் அதே சூளையின் பக்கத்தில் இயங்கி வரும் மற்றொரு செங்கல் சூளையின் உரிமையாளரான சீனிவாசன், பழனியின் சூளையை கடந்து சென்றபோது அங்குள்ள அறையில் இருந்து அமுலுவின் முனகல் சத்தம் கேட்டு கதவை தட்டியுள்ளார். கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் அறையின் கதவை உடைத்து பார்த்துள்ளார்.
அப்போது தெய்வசிகாமணியும் அமுலுவும் மயங்கிய நிலையில் இருந்துள்ளனர். உடனடியாக அவர்களை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், தெய்வசிகாமணி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் ஆபத்தான நிலையில் இருந்த அமுலுவுக்கு தீவிர சிகிச்ைச அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அமுலுவும் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.
மூச்சுத்திணறி இறந்த பெற்ேறாரின் உடல்களை பார்த்து 3 குழந்தைகளும் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இதுபற்றி அறிந்ததும் வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் ராஜன்பாபு தலைமையில் வேலூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் வேலூர் தாசில்தார் செந்தில், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா மற்றும் வருவாய்த் துறையினரும் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த சம்பவம் எதிரொலியாக கனிமம மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனரகமும் இதுதொடர்பான விசாரணையில் இறங்கியுள்ளது.
The post செங்கல் சூளை புகையில் சிக்கி மூச்சுத்திணறி கணவன், மனைவி பரிதாப பலி வருவாய்த்துறையினர், போலீசார் விசாரணை வேலூர் அடுத்த கணியம்பாடியில் அறையில் தங்கியபோது appeared first on Dinakaran.