கடந்த வாரம் அண்ணாவைப் பற்றியும், நேற்று பெரியாரை பற்றியும் அண்ணாமலை அவதூறாக பேசியுள்ளார். இந்நிலையில் அண்ணா பற்றி பேசிய அவதூறு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பா.ஜ. இல்லை என்று கூறினார். மேலும் இது கட்சியின் கருத்து தான் என தெளிவுபடுத்தினார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இனி அதிமுக கூட்டணி வேண்டும் என்றால், அண்ணாமலை தமிழக பா.ஜ. தலைவராக இருக்கக் கூடாது என்பதை மறைமுக நிபந்தனையாக விதிப்பதைத் தான் ஜெயக்குமாரின் அறிவிப்பு உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் அண்ணாமலை பற்றி பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. தூத்துக்குடி சிவன்கோயில் தெரு நுழைவுப் பகுதியிலும், ஜெயராஜ் ரோட்டிலும் வைக்கப்பட்டுள்ள தட்டி போர்டில், ‘‘ ஐபிஎஸ் படித்தவனை ஆடு மேய்க்க விட்ட இயக்கமல்ல. ஆடு மேய்த்தவனை ஐபிஎஸ் ஆக்கிய அண்ணா பெயரில் இயங்கும் மாபெரும் மக்கள் இயக்கம்.
கூட்டணியாவது…. கூந்தலாவது… நன்றி மீண்டும் வராதீர்கள் என்றும், ‘‘ அதிமுக கூட்டணியில் பா.ஜ. இல்லை. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டாச்சு. நாளை நமதே… 40ம் நமதே என்றும் அந்த போஸ்டர்களில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களை தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி 39வது வட்ட செயலாரும், மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞரணி செயலாளருமான திருச்சிற்றம்பலம், அதே இளைஞரணி துணைச் செலயாளர் டாக்டர் எஸ்பி டைகர் சிவா ஆகியோர் ஒட்டியுள்ளனர். இந்த போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கூட்டணியாவது… கூந்தலாவது… நன்றி மீண்டும் வராதீர்கள்…அண்ணாமலைக்கு எதிராக அதிமுக போஸ்டர் appeared first on Dinakaran.
