தற்போதைய குழுவை கலைத்து விட்டு அதானி குறித்து விசாரிக்க புதிய நிபுணர் குழு அமைக்க கோரிக்கை: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு

புதுடெல்லி: அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரியில் வெளியிட்ட ஆய்வறிக்கையில் அதானி குழுமம் பங்குகளின் விலையை மாற்றி அமைத்து மோசடி மற்றும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அதானி குழுமத்தின் பங்குகள் சரிந்தது. இது குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அபய் மனோகர் சாப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது. இந்த நிபுணர் குழு அளித்த இடைக்கால அறிக்கையில் அதானி குழுமம் அது போன்ற முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழுவில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் ஓபி. பட் இருப்பது முரண்பாடாக இருப்பதாக அனாமிகா ஜெய்ஸ்வால் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், பட் தற்போது தலைவராக இருக்கும் கிரீன்கோ நிறுவனம் அதானி குழுமத்துடன் வர்த்தக தொடர்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், இவர் எஸ்பிஐ தலைவராக இருந்த கடந்த காலத்தில் தான் விஜய் மல்லையாவுக்கு ரூ.7200 கோடி கடன் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக 2018ல் சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

இது தவிர, நிபுணர் குழுவில் 1996-2009ம் ஆண்டுகளில் ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக இருந்த கே.வி. காமத், வீடியோகான் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் வழங்கிய விவகாரத்தில் சிபிஐ எப்ஐஆரில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் செபி ஆணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் அதானி குழுமத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசனும் நிபுணர் குழுவில் இடம் பெற்றுள்ளதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நீதிமன்றம் இந்த நிபுணர் குழுவை கலைத்து குறைபாடற்ற நடத்தை உடையவர்களை கொண்டு புதிய நிபுணர் குழுவை அமைக்கும்படி மனுவில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

The post தற்போதைய குழுவை கலைத்து விட்டு அதானி குறித்து விசாரிக்க புதிய நிபுணர் குழு அமைக்க கோரிக்கை: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு appeared first on Dinakaran.

Related Stories: