மொரீஷியசில் தடை எதிரொலி அதானி குழுமத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?: செபிக்கு காங்கிரஸ் கேள்வி

ஐதராபாத்: அதானியுடன் தொடர்புடைய 2 நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக மொரீஷியசில் தடை விதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் செபி மட்டும் ஏன் அதானி குழுமத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: அதானி குழுமத்துடன் தொடர்புடைய 2 நிறுவனங்கள் மொரிஷீயசில் நிதி சேவைகள் சட்டம், பத்திரச் சட்டம், தீவிரவாத நிதி உதவி உள்ளிட்ட பல சட்டங்களை மீறியதற்காக கடந்த 2002 மே மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் செபியை போல, மொரீஷியசில் உள்ள நிதிச் சேவை ஆணையம் (எப்எஸ்சி) இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட அந்த 2 நிறுவனங்களும் அதானியின் சகோதரர் வினோத் அதானியின் கூட்டாளிகளான நாசர் அலி ஷபான் அலி மற்றும் தைவானை சேர்ந்த சாங் சுங் லிங்குக்கு சொந்தமானவை.

அலி மற்றும் சாங் ஆகியோர் இந்த மோசடி நிதி மூலம் அதானி நிறுவனங்களுக்கு சந்தேகத்திற்குரிய முதலீடுகளை செய்துள்ளனர். எனவே, மோசடி செய்த 2 நிறுவனங்கள் மீது மொரீஷியஸ் நடவடிக்கை எடுக்கும்போது, அதானி குழுமம் மீது செபி நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? மோடியால் உறங்கிக் கொண்டிருக்கும் செபி இனியாவது விழித்துக் கொள்ளுமா? பங்குச்சந்தையின் நியாயமான கட்டுப்பாட்டாளராக, பங்குதாரர்களின் நலன்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை செபி ஏற்படுத்த தவறி உள்ளது. எனவே, நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே உண்மை வெளிவரும். நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மொரீஷியசில் தடை எதிரொலி அதானி குழுமத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன்?: செபிக்கு காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: