திமுக முப்பெரும், பவள விழா மாநாடு கோலாகலம் * முதல்வர் வருகையால் விழாக்கோலம் பூண்டது * தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் வீரம் விளைந்த வேலூரில் இன்று

பள்ளிகொண்டா, செப்.17: 75 வருடம் தமிழ்நாட்டின் அசைக்க முடியாத ஆனி வேராக விளங்கி வரும் திமுக கட்சியின் பவள விழா மற்றும் முப்பெரும் விழா சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வீரம் விளைந்த வேலூரில் இன்று கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இதற்காக கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை உள்ள லட்சோப லட்ச கட்சி தொண்டர்கள் படை வேலூரை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால், வேலூர் மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள மைதானத்தில் திமுக முப்பெரும், பவள விழா மாநாடு இன்று நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கழகம் காத்த லட்சிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கியும், திமுகவின் வளர்ச்சிக்காக சிறப்பாக பாடுபடும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களுக்கு பொற்கிழி மற்றும் பணமுடிப்புகள் வழங்கி கொள்கை முழக்க சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கு திமுக பொதுச்செயலாளரும், நீர்வளம், கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்குகிறார். முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப்பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழிகருணாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர். வேலூர் மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற எம்எல்ஏவுமான ஏ.பி.நந்தகுமார் வரவேற்புரையாற்ற உள்ளார். மாநகர செயலாளரும், வேலூர் தொகுதி எம்எல்ஏவுமான கார்த்திகேயன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையிலிருந்து வேலூருக்கு ரயில் மூலம் வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காட்பாடி ரயில்வே ஸ்டேஷனில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா உட்பட திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்த புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கி ஓய்வெடுத்தார்.

தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு வேலூர் பிடிஓ அலுவலக நுழைவு வாயில் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். அதனையடுத்து சுமார் 10 மணியளவில் வேலூர் அடுத்த மேல்மொணவூர் அப்துல்லாபுரம் இலங்கை தமிழர் மறு வாழ்வு முகாமில் புதியதாக கட்டப்பட்டுள்ள 220 வீடுகளை திறந்து வைத்து பயனாளர்களுக்கு சாவிகளை வழங்கி, மாநிலம் முழுவதும் புதியதாக கட்டப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்க உள்ளார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும் முதல்வர் பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரியில் நடைபெறும் முப்பெரும், பவள விழா மாநாட்டு திடலில் தயார் நிலையில் இருக்கும் பிரம்மாண்ட கட்சி கொடியினை ஏற்றி வைத்து மாநாட்டிற்கான நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்கிறார். அதனையடுத்து மீண்டும் வேலூரில் உள்ள தனியார் ஓட்டலுக்கு செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதிய உணவு அருந்திய பிறகு சிறிது நேரம் ஓய்வெடுக்க உள்ளார். இதனிடையே மதியம் 3 மணியளவில் முப்பெரும், பவள விழாவினை முன்னிட்டு மேடையில் பிரபல பாடகர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து மாலை 5 மணிக்கு திமுக கட்சியின் முப்பெரும், பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று தொண்டர்களுக்கு தொண்டு செய்யும் வகையில் கழக லட்சிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கி, கட்சிக்காக பாடுபடும் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்களுக்கு நற்சான்று, பணமுடிப்புகளை வழங்கி வீர, தீர சிறப்புரையாற்ற உள்ளார். இதனால் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, வேலூர் மாநகர் முழுவதும் முதல்வரை வரவேற்கும் பேனர், பிரமாண்ட கட்-அவுட்கள் மற்றும் விழா மேடை பந்தல் அருகே சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாழை தோரணங்களோடு திரும்பும் இடமெல்லாம் கருப்பு, சிவப்பு கட்சி கொடிகள் பட்டொளி வீசி பறந்து வருகின்றன. மேலும், முதல்வரை வரவேற்கும் விதமாக விழா பந்தல் அருகே முதல்வர் படம் பொறித்த ராட்சத பலூன் பறக்க விடப்பட்டுள்ளன.

இதனால், வேலூர் கிரீன் சர்க்கிள் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பள்ளிகொண்டா சுங்கசாவடி வரை சாலை முழுவதும் கட்சி கொடிகள், பேனர், தோரணங்கள் என மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும், இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் திமுக முக்கிய இடம் பெற்ற பிறகு தமிழ்நாட்டில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுவதை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவே உற்று நோக்கும் விதமாக பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

The post திமுக முப்பெரும், பவள விழா மாநாடு கோலாகலம் * முதல்வர் வருகையால் விழாக்கோலம் பூண்டது * தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் வீரம் விளைந்த வேலூரில் இன்று appeared first on Dinakaran.

Related Stories: