முதல்வர் ஹிமந்தா மனைவிக்கு ரூ.10 கோடி மானியம் விவகாரம் அசாம் பேரவையில் அமளி

கவுகாத்தி: அசாம் பாஜ முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவின் மனைவியான ரிங்கு புயான் சர்மா நடத்தி வரும் கம்பெனிக்கு ஒன்றிய உணவு பதப்படுத்துதல் அமைச்சகம் ரூ.10 கோடி மானியம் வழங்கியுள்ளதாக காங்கிரஸ் எம்பி தருண் கோகய் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் அசாம் பேரவையில் நேற்று 2வது நாளாக எதிரொலித்தது. கேள்வி நேரத்தின் போது இந்த விவகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்எல்ஏ கமலாக்கியா டே பூர்யகாயஸ்தா,‘‘ முதல்வர் மனைவியின் நிறுவனத்துக்கு பசுந்தரா திட்டத்தின் கீழ் நிலம் ஒதுக்கப்பட்டதா என்பது குறித்து வருவாய்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்’’ என்றார். அப்போது, சபாநாயகர் பிஸ்வஜித் டைமாரி, முதல்வரும் பேரவையில் இல்லை’’ என்றார்.

ஆனால் கமலாக்கியா தொடர்ந்து அதே கேள்வியை எழுப்பினார். இதனால் அமைச்சர்களுக்கும் எதிர்கட்சி எம்எல்ஏக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அவை 30 நிமிடம் ஒத்திவைக்கப்பட்டது. அவை மீண்டும் கூடிய போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இந்த விவகாரத்தை கிளப்பியதால் அமளி ஏற்பட்டு 5 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது முறை ஒத்திவைப்புக்கு பின் அவை கூடிய போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் அமளி உருவானது. இதனால் அவை 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு அவை கூடிய போது எதிர்க்கட்சி துணை தலைவர் ரகிபுல் உசேன் எழுந்து, இந்த விவகாரம் குறித்து உடனே பேச அனுமதி தராததால் எதிர்க்கட்சியினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

The post முதல்வர் ஹிமந்தா மனைவிக்கு ரூ.10 கோடி மானியம் விவகாரம் அசாம் பேரவையில் அமளி appeared first on Dinakaran.

Related Stories: