ஆவின் நெய் கிலோவுக்கு ரூ.70 அதிகரிப்பு: வெண்ணெய் விலையும் உயர்ந்தது

சென்னை: ஆவின் நிறுவனத்தின் சார்பில் விற்கப்படும் நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. தமிழ்நாடு அரசு நிறுவனத்தின் மூலம் தரமான பால் பொருட்கள் குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில், ஆவின் பால் மட்டுமின்றி, குலாப்ஜாமுன், பால்கோவா, ஐஸ்கிரீம், நெய், வெண்ணெய், மில்க் கேக், பாயாசம் மிக்ஸ் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளது. இவற்றில் ஆவின் நெய், வெண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலை உயர்வு நேற்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, அரை கிலோ ஆவின் நெய் ரூ.50 உயர்ந்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ஆவின் நெய் (ரூ.630) ரூ.70 உயர்ந்து ரூ.700க்கு விற்பனை செய்யப்படும். இதுபோன்று அரை கிலோ (500 கிராம்) வெண்ணெய் (ரூ.260) ரூ.15 உயர்ந்து ரூ.275க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 15 மில்லி நெய்யின் விலை 14 ரூபாயிலிருந்து 15 ரூபாயாகவும் , 100 மில்லி நெய்யின் விலை ரூ. 70லிருந்து ரூ. 80 ஆகவும், 100 மில்லி நெய் பாட்டிலின் விலை ரூ. 75 லிருந்து ரூ. 85 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 200 மில்லி நெய் பாட்டில் ரூ.145 லிருந்து ரூ.160 ஆகவும், அரை கிலோ நெய் பாட்டில் ரூ.315 லிருந்து ரூ.365ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் வெண்ணெய்யின் விலையானது 100 கிராம் ரூ.55 லிருந்து ரூ.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு ஆவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஆவின் நெய் கிலோவுக்கு ரூ.70 அதிகரிப்பு: வெண்ணெய் விலையும் உயர்ந்தது appeared first on Dinakaran.

Related Stories: