ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா- தெலுங்கு தேசம் கூட்டணி:நடிகர் பவன் கல்யாண் அறிவிப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை ஜனசேனா- தெலுங்கு தேசம் கூட்டணியுடன் சந்திக்கும் என்று நடிகர் பவன் கல்யாண் அறிவித்தார். ஆந்திர மாநிலத்தில் திறன்மேம்பாட்டு நிதி மோசடி செய்ததாக பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வரும் ெதலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜனசேனா கட்சி தலைவர் நடிகர், பவன் கல்யாண் நேற்று சந்தித்து பேசினார். சந்திரபாபு மகன் லோகேஷ், மைத்துனர் பாலகிருஷ்ணாவுடன் இணைந்து சிறைக்கு வெளியே பவன் கல்யாண் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

14 ஆண்டுகள் முதல்வராகவும், 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்த மூத்த அரசியல் தலைவரை நிதி மோசடி செய்ததாக பொய் வழக்கில் கைது செய்துள்ளனர். சிறையில் உரிய வசதிகள் கூட செய்து தரப்படவில்லை. ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அராஜகத்தை ஒடுக்க அடுத்த தேர்தலில் ஜனசேனா- தெலுங்கு தேசம் கூட்டணியுடன் தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவுடன் நான் கூட்டணியில் உள்ள நிலையில் அவர்களும் என்னுடன் வருவார்கள். எங்கள் கூட்டணியில் சேர விரும்பும் கட்சிகளை இணைத்து கொண்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிரான எந்த ஒரு சந்தர்ப்பத்தையும் விடாமல் ஒன்றிணைந்து செல்வோம்.

ஏற்கனவே முதல்வர் ஜெகன்மோகன் பேச்சை கேட்டு நடந்த அதிகாரிகள் சிறைக்கு சென்றார்கள். அதேபோல் முதல்வர் ஜெகனின் அராஜகத்திற்கு துணையாக இருக்கும் டிஜிபி, முதன்மை செயலாளர் மற்றும் அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்களும் சிறைக்கு செல்வீர்கள். ஜெகனி்ன் பதவிக்காலம் இன்னும் 6 மாதம் மட்டுமே உள்ளது. சட்டப்படி தேர்தலை சந்திக்கவும், ஆயுதம் தாங்கி போரிடவும் தயார்.
இவ்வாறு அவர் பேசினார்.

The post ஆந்திரா சட்டமன்ற தேர்தலில் ஜனசேனா- தெலுங்கு தேசம் கூட்டணி:நடிகர் பவன் கல்யாண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: