நிலத்தில் மாடு மேய்ந்த தகராறில் பெண் அடித்துக்கொலை திருவண்ணாமலை அருகே

திருவண்ணாமலை, செப்.14: திருவண்ணாமலை அருகே மாடு மேய்ந்த தகராறில் பெண்ணை அடித்துக்கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை அடுத்த பண்டிதப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி முனியம்மாள்(58). இவருக்கும், அவரது உறவினர்களுக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை பண்டிதப்பட்டு அடுத்த விநாயகபுரம் கிராமத்தில் உள்ள நிலத்தில் முனியம்மாள் மாடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, தங்களுடைய நிலத்தில் மாடு மேய்வதாக அவரது உறவினர்கள் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இந்த கைகலப்பில் நிலைத்தடுமாறி முனியம்மாள் கீழே விழுந்துள்ளார். அப்போது, அங்கிருந்த கருங்கல் மீது தலை மோதியது. அதனால், பலத்த காயமடைந்த அவர் அதே இடத்தில் இறந்துள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. அந்த வழியாக சென்றவர்கள் முனியம்மாள் இறந்து கிடந்ததை பார்த்து, போலீசுக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக, திருவண்ணாமலை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், எஸ்ஐ சிவசங்கரன் ஆகிேயார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட முனியம்மாள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முனியம்மாளை அடித்து கீழே தள்ளி கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர். மாடு மேய்ந்த தகராறில் இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா?, கொலையில் ஈடுபட்டவர்கள் யார்? என தீவிர விசாரணை நடந்து வருகிறது.

The post நிலத்தில் மாடு மேய்ந்த தகராறில் பெண் அடித்துக்கொலை திருவண்ணாமலை அருகே appeared first on Dinakaran.

Related Stories: