லிபியா நாட்டைத் தாக்கிய டேனியல் புயலால் பேரழிவு… 5,200 பேர் உயிரிழப்பு: 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை

திரிபோலி: புயல், மழை காரணமாக லிபியா நாட்டில் 5,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை.மத்திய தரைக்கடலில் உருவான டேனியல் புயல் லிபியாவை தாக்கியது. இதனால், கிழக்கு லிபியாவின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதில் கடலோர மாவட்டமான டெர்னாவில் தொடர்ந்து பெய்த கனமழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் அணைகள் உடைந்தன. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. மேலும் வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட கார்கள் இயற்கை சீற்றத்தின் கோரமுகத்தை காட்டுவதாக ஆங்காங்கே கவிழ்ந்து கிடக்கின்றன. இதனால் டெர்னா நகரம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நகரில் மட்டும் ஆயிரக்கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட உடல்கள் வீதிகளில் கிடப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பிற்கு 5,200 பேர் உயிரிழந்த நிலையில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 ஆயிரம் பேரின் கதி என்ன ஆனது என்று தெரியாததால் உலக நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. சிரேனேக்கா மாகாணத்தில் உள்ள 3 பகுதிகள் பேரழிவு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. பிற பகுதிகளில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மருத்துவம் மற்றும் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. மேலும் கிழக்கு லிபியாவில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் ஒசாமா ஹமாத் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர் நேரில் சென்று மீட்புப் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளார்.

The post லிபியா நாட்டைத் தாக்கிய டேனியல் புயலால் பேரழிவு… 5,200 பேர் உயிரிழப்பு: 10,000-க்கும் மேற்பட்டோரை காணவில்லை appeared first on Dinakaran.

Related Stories: