ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் சாலை மறியல் போராட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், விலைவாசி உயர்வு மற்றும் சொந்த லாபங்களுக்காக நாட்டை நாசமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு கண்டித்தும், தமிழ் மொழியை அழித்து இந்தியை புகுத்த நினைக்கும் பாஜ அரசை கண்டித்தும் சாலை மறியல் போராட்டம் காஞ்சிபுரம் காந்தி சாலை தேரடியில் நேற்று நடைபெற்றது‌. இதில், மாவட்ட செயலாளர் தலைமை கார்த்தி தலைமை தாங்கினார். தொகுதி துணை செயலாளர் கிருஷ்ணமுர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர்கள் சுந்தரமூர்த்தி, சங்கர், பொருளாளர் ஸ்டாலின், மாவட்ட துணை செயலாளர் சீனிவாசன்,
காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் கமலநாதன், தொகுதி குழு உறுப்பினர்கள் மூர்த்தி, லாரன்ஸ், ஆறுமுகம் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்டோர் ஒன்றிய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 98 பேரை கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து, பின்னர் விடுவித்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

செங்கல்பட்டு: கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒன்றிய பாஜ அரசு, மக்கள் விரோத கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்துகிறது. “மோடி அரசே வெளியேறு” என்ற முழக்கத்தை முன்வைத்து, அத்தியாவசிய பொருட்கள் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை, பரனூர் சுங்கச்சாவடியில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஊழலை தடுக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர் கணடன கோஷங்களை எழுப்பியவாறு, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று, இந்தியன் வங்கியை முற்றுகையிட்டும், ஒன்றிய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு, அக்கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பின்னர், அவர்கள் செங்கல்பட்டு – மதுராந்தகம் இணைப்பு சாலையில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால், அங்கு பரபரப்பு காணப்பட்டது.

The post ஒன்றிய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் சாலை மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: