மழை பாதிப்பு பணிகளை சீர்செய்ய தமிழக அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: மழை பாதிப்பு பணிகளை சீர்செய்ய, அரசு இயந்திரம் முழுமையாக தயார்  நிலையில் உள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். மழை பாதிப்பு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டு பள்ளமான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை உடனடியாக அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் 12 மணி நேரத்தில் 20 செ.மீ மழை பெய்துள்ளது. இரண்டு முறை சேவை  துறைகளுடன் முதல்வர் ஆய்வு கூட்டங்கள் நடத்தியுள்ளார். முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. மாநகராட்சி மற்றும் குடிநீர்  கழிவுநீர் வாரியம் சார்பில் காலையில் இருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன. மேலும்,சைதாப்பேட்டை ஒட்டிய அடையாற்றில் தடுப்புச்சுவர்  கட்டும் பணி ஒரு அளவுக்கு நிறைவு பெற்றிருக்கிறது. இதன் காரணமாக மழை நீர்  வீடுகளுக்குள் புகாது. மழைபாதிப்புகள் இருக்கக் கூடிய சாலைகளை கண்டறிந்து அதனை சீர் செய்யும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. மழை  நின்றால் மட்டுமே நீரை வெளியேற்றும் பணியை விரைவாக மேற்கொள்ள முடியும். அதற்கான பணியில் மாநகராட்சி தயாராக உள்ளது. கடந்த 2015 போன்ற சூழல் தற்போது  இல்லை. ஏரிகளில் நீரின் அளவை கண்காணித்து தேவைக்கு ஏற்ப நடவடிக்கை  மேற்கொள்வதற்கான உத்தரவை அதிகாரிகளுக்கு முதல்வர் வழங்கியிருக்கிறார். மேலும் மழை பாதிப்பு பணிகளை  சீர்செய்ய அரசு இயந்திரம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்….

The post மழை பாதிப்பு பணிகளை சீர்செய்ய தமிழக அரசு இயந்திரம் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: