‘கூல் லிப்’ போதை பொருட்கள் விற்றால் கிரிமினல் நடவடிக்கை

நாமக்கல் செப்.12: நாமக்கல் மாவட்டத்தில், கடைகளில் ‘கூல் லிப்’ போதை பொருட்கள் விற்பனை செய்தால், வியாபாரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.‘கூல் லிப்’ எனும் புகையிலையானது, வாய் புற்றுநோயை ஏற்படுத்தி, உயிரையும் கொல்லும் தன்மை வாய்ந்தது. இதில், நச்சுத்தன்மை கொண்ட வேதிப் பொருட்களான நிக்கோட்டின், கார்பன் மோனாக்சைடு, பென்சீன், ஆர்சனிக் மற்றும் பார்மலின் போன்ற பல்வேறு பொருட்கள் கலந்துள்ளன. இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் கலந்து போதையை கொடுக்கிறது. மாணவர்கள் தங்களைவிட வயதில் மூத்தவர்களுடன் பழகும் போதும், நண்பர்கள் மூலமும் இந்த பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். ‘கூல் லிப்’ மூலம் வாய் புற்றுநோய் ஏற்படும் என்பதை அறியாமல், இந்த பழக்கத்திற்கு அடிமையாகின்றனர்.

இதனிடையே, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின்படி, பெட்டிக் கடைகள் மற்றும் மளிகை கடைகளில் காவல் துறை மற்றும் இதர துறைகளுடன் இணைந்து ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் 11 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட ‘கூல் லிப்’ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர்கள் மீது காவல் துறையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா கூறியதாவது:

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் செயல்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும். வளரிளம் பருவ குழந்தைகளின் செயல்பாடுகளை கவனித்து, அன்புடன் பழகி அவர்களுடன் நேரம் செலவிட வேண்டும். பெற்றோர்கள் அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். அரசுடன் பெற்றோர்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே, மாணவர்களை ‘கூல் லிப்’ போன்ற போதை பொருட்களின் பிடியில் இருந்து வெளியே கொண்டு வரவும், பழக்கத்திற்கு அடிமையாகாமலும் பாதுகாக்க முடியும். பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்படும் இடத்திலிருந்து 100 மீட்டர் சுற்றளவிற்கு ‘கூல் லிப்’ போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

தடையை மீறி போதை பொருட்கள் விற்பது தெரியவந்தால், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் தடை செய்யப்பட்ட ‘கூல் லிப்’ போன்ற போதை பொருட்கள் கடைகளில் விற்பனை செய்வது தெரியவந்தால், உடனடியாக 1098 மற்றும் 94861 11098 என்ற எண்களுக்கு தகவல் கொடுக்கலாம். போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் குறித்து, தகவல் கொடுப்பவரின் ரகசியம் பாதுகாக்கப்படும். இவ்வாறு கலெக்டர் உமா தெரிவித்தார்.

The post ‘கூல் லிப்’ போதை பொருட்கள் விற்றால் கிரிமினல் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: