ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் ₹65.76 லட்சத்தில் மு.வரதராசனார் உருவச்சிலை குவிமாட அரங்கம்

*அமைச்சர் ஆர்.காந்தி அடிக்கல் நாட்டினார்

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் தமிழறிஞர் மு.வரதராசனாருக்கு ₹65.76 லட்சம் மதிப்பில் 7 அடி உயரமுள்ள உருவச்சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம்
அமைக்கும் பணிக்கு அமைச்சர் ஆர்.காந்தி நேற்று அடிக்கல் நாட்டினார். 20ம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தமிழறிஞர்களில் ஒருவரும், பல்வேறு இலக்கிய கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள், புதினங்கள் மற்றும் சிறுகதைகள் ஆகியவற்றை தமிழில் படைத்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக பணியாற்றிய பன்முக ஆற்றல் கொண்ட மு.வரதராசனாருக்கு உருவச்சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, ராணிப்பேட்டை நகர வாரச்சந்தை மைதானம், கெல்லீஸ் சாலையில் மாவட்ட நூலகம் அமைவிடத்திற்கு முன்பாக 236 சதுர மீட்டர் பரப்பளவில் சிறு பூங்காவுடன் மு.வரதராசனாருக்கு உருவச்சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம் அமைக்கும் பணிக்கு ₹65 லட்சத்து 76 ஆயிரத்து 562 தொகைக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்
ளது.

தொடர்ந்து, நேற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் ₹65.76 லட்சம் மதிப்பில் மு.வரதராசனாருக்கு 7 அடி உயரமுள்ள உருவச்சிலையுடன் கூடிய குவிமாட அரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார்.

ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார். மேலும், பணியை தரமாகவும், விரைவாகவும் முடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டின் பெர்னாட்ஷா என அழைக்கப்பட்டவர்

தமிழறிஞர் மு.வரதராசனார் ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், வேலம் கிராமத்தில் 25.04.1912 அன்று பிறந்தார். தமிழ்நாட்டு பெர்னாட்ஷா, ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர் ஆகிய சிறப்பு பெயர் கொண்டவர். சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழில் முதல் முனைவர் பட்டமும், சாகித்ய அகாடெமி விருதும் பெற்றுள்ளார்.

பெற்ற மனம், கரித்துண்டு, கல்லோ? காவியமோ? அகல்விளக்கு, காதல் எங்கே? குறட்டை ஒலி உள்ளிட்ட 91 நூல்களை தமிழுக்கு தந்துள்ளார். சோவியத் நாடு, பாரிஸ், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி, கிரேக்கம், எகிப்து, அமெரிக்கா முதலான பல நாடுகளின் கல்வித்துறை ஆய்வு மாநாடுகளில் பங்கு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ராணிப்பேட்டை வாரச்சந்தை மைதானத்தில் ₹65.76 லட்சத்தில் மு.வரதராசனார் உருவச்சிலை குவிமாட அரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: