குறுவை நெற்பயிர் பாதிப்பிற்கான இழப்பீட்டை கர்நாடக அரசிடமிருந்து பெற உச்ச நீதிமன்றத்தில் முறையீடு: தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: டெல்டா மாவட்டங்களில் குறுவை பாதிப்பிற்கான இழப்பீட்டை கர்நாடக அரசிடமிருந்து பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தனி முறையீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் தற்போதைய நிலையில் 20 சதவீதத்திற்கும் மேலாக பயிர்கள் கருகிவிட்டது. ஆகஸ்ட் மாதம் முதல் சம்பா விதையிட வேண்டிய விவசாயிகள் கையறு நிலையில் உள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை அவசரமாக விசாரித்து தண்ணீர் கிடைக்க செய்ய வேண்டிய உச்ச நீதிமன்றம் வரும் 21ம் தேதிக்கு விசாரிப்பதாக தள்ளி வைத்துள்ளது. தண்ணீர் கிடைத்தால் தான் பெரிய பாதிப்பில் இருந்து மீள முடியும்.

கருகி காய்ந்து மற்றும் இனி பிழைக்க வாய்ப்பு இல்லாது பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடியை கணக்கெடுத்து ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வழங்கிட வேண்டும். சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொள்ள சிறப்பு திட்டங்களை வழங்கிடவேண்டும். விவசாயிகளின் நம்பிக்கைக்கு இந்த திட்டங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவித்திட வேண்டும். டெல்டாவில் நெல் பயிர் பாதிப்பிற்கான இழப்பீட்டை கர்நாடக அரசு கொடுத்திட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தனி முறையீடு செய்திட வேண்டும். எதிர்வரும் ஆண்டுகளில் தீர்ப்பின்படி தண்ணீர் பெற்றிட தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட உச்ச நீதிமன்றத்தில் முறையிடவேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post குறுவை நெற்பயிர் பாதிப்பிற்கான இழப்பீட்டை கர்நாடக அரசிடமிருந்து பெற உச்ச நீதிமன்றத்தில் முறையீடு: தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: