48 சேவைகள் ஆன்லைனில் பயன்பெற நடவடிக்கை வீட்டிற்கே ஆவணங்களை அனுப்ப முடிவு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில்

 

வேலூர், செப்.8: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் 48 சேவைகள் ஆன்லைன் மூலம் பயன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் மட்டுமே டிரைவிங் லைசென்ஸ் முதல், வாகன பதிவெண் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பெற முடியும். இவற்றில் திருத்தம், சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் விண்ணப்பித்து பெற முடியும். பொதுமக்கள் நேரில் வந்து காத்திருக்கும் சம்பவங்களை குறைக்கும் வகையில் ஆர்டிஓ அலுவலக சேவைகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 42 வெவ்வேறு விதமான சேவைகளை இனி ஆன்லைனில் பெறும் வசதியை பெறலாம் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்லாமல், ஆன்லைன் மூலமாகவே, தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மேலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, வட்டார போக்குவரத்து அலுவலக 42 சேவைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. பழங்குடியினர் உரிமம், நகல் ஓட்டுனர் உரிமம், ஓட்டுனர் உரிமத்தில் பெயர் மாற்றம், பன்னாட்டு டிரைவிங் லைசென்ஸ், வாகனத்துக்கான தற்காலிக பதிவெண், பர்மிட்டில் பெயர் மாற்றம், பர்மிட் ஒப்படைத்தல் போன்றவை எளிதில் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

மாநிலம் முழுதும் உள்ள, 91 ஆர்டிஓ அலுவலகங்கள், 54 வாகன போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகங்களை, கணினி மயமாக்கும் முயற்சி எடுக்கப்படுகிறது. 48 சேவைகளில் முதற்கட்டமாக, ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட 6 சேவைகள் ஏற்கனவே ஆன்லைனில் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும் முழு வீச்சில் அது செயல்படவில்லை. எனவே, அதை சரி செய்ய போக்குவரத்து ஆணையரகம் திட்டமிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட அனைத்து விபரங்களும் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதில் ஏதாவது விபரங்கள் மாறுபட்டிருந்தால், சேவையை பெற இயலாது.

போக்குவரத்து சார்ந்த சேவைகளை மாநில போக்குவரத்து ஆணையத்தின் https://tnsta.gov.in இணைய தளத்தில் பெறலாம். ஆவணங்களை வீடுகளுக்கே சென்று வழங்கும் வகையில் தபால்துறையுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் நடந்து வருகிறது. ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான தேர்வில் பங்கேற்கவும், வாகன எப்.சி, உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பெறவும், ஆர்டிஓ, அலுவலகங்களுக்கு நேரில் வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post 48 சேவைகள் ஆன்லைனில் பயன்பெற நடவடிக்கை வீட்டிற்கே ஆவணங்களை அனுப்ப முடிவு வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் appeared first on Dinakaran.

Related Stories: