அந்தமானில் மோசமான வானிலை சென்னை திரும்பியது ஏர் இந்தியா விமானம்

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஏர் இந்தியா விமானம், அங்கு நிலவிய மோசமான வானிலை காரணமாக தரை இறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது. இதனால் பயணிகள் ஏமாற்றத்துடன் சென்றனர். சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் நேற்று அதிகாலை 5.05 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. ஆனால், அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதால் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் சோதனைகள் முடிக்கப்பட்டு அந்தமான் செல்ல இருந்த 151 பயணிகள் விமானத்தில் ஏறாமல் ஓய்வறைகளில் காத்திருந்தனர். இந்நிலையில் அந்த விமானம் சுமார் 4 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக காலை 9:40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு புறப்பட்டு சென்றது. அந்தமான் விமான நிலையத்தை நெருங்கியபோது, அங்கு மீண்டும் மோசமான வானிலை நிலவியது. இதனால் விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இந்நிலையில் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் விமானியை தொடர்பு கொண்டு, விமானத்தை மீண்டும் சென்னைக்கு திருப்பிக் கொண்டு வரும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அந்த விமானம் மீண்டும் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சென்னைக்கு வந்தது. தொடர்ந்து இந்த விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், பயணிகள் மீண்டும் இதே விமான டிக்கெட்டில் (இன்று) அந்தமானுக்கு பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே இந்த ஏர் இந்தியா விமானத்தில் அந்தமானில் இருந்து சென்னைக்கு வருவதற்காக காத்திருந்த 150க்கும் மேற்பட்ட பயணிகள், விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதால் சென்னைக்கு வர முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

The post அந்தமானில் மோசமான வானிலை சென்னை திரும்பியது ஏர் இந்தியா விமானம் appeared first on Dinakaran.

Related Stories: