காதல் ஜோடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்த டாக்டரின் கை, கால்களை கட்டிப்போட்டு செருப்படி: வீடியோ வைரலானதால் நடவடிக்கை


ஜான்சி: காதல் ஜோடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்த டாக்டரின் கை, கால்களை கட்டிப்போட்டு அவரை மக்கள் செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி அடுத்த மவுரானிபூர் பகுதியில் இளைஞர் ஒருவரின் கை, கால்களை கயிற்றால் கட்டிப்போட்டு, அவரை செருப்பால் அடிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, ரடோசா திகேலா பகுதியில் தனியார் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் குவாக் என்பது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து ரூரல் எஸ்பி கோபிநாத் சோனி கூறுகையில், ‘சொந்தமாக கிளினிக் நடத்தி வரும் டாக்டர் குவாக்கின் வீட்டிற்கு காதல் ஜோடி வந்துள்ளது. அந்த காதல் ஜோடிக்கு ஆதரவாக மருத்துவர் இருந்துள்ளார். இதையறிந்த பெண்ணின் குடும்பத்தினர், திடீரென மருத்துவரின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் இருந்த மருத்துவரை வெளியே இழுத்து போட்டு தாக்கினர். பின்னர் அவரது கை, கால்களை கயிற்றால் கட்டிப் போட்டு கீழே படுக்க வைத்தனர். அந்தப் பெண்ணையும் சரமாரியாக தாக்கினர்.

கீழே படுத்து கிடந்த மருத்துவரை செருப்பால் அடித்துள்ளனர். மருத்துவரை தரையில் படுக்கவைத்து தரதரவென்று இழுத்து சென்றுள்ளனர். இந்த காட்சிகள் யாவும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post காதல் ஜோடி சந்திப்புக்கு ஏற்பாடு செய்த டாக்டரின் கை, கால்களை கட்டிப்போட்டு செருப்படி: வீடியோ வைரலானதால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: