லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் நாய் கடித்து ஒரு மாதம் ஆகியும் பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்த 14 வயது சிறுவன் ரேபிஸ் நோய்த்தொற்று முற்றி தந்தையின் மடியிலேயே உயிரிழந்த சம்பவம் பார்ப்போரை கண்ணீர் வரவைத்துள்ளது. உத்திரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் பெண் ஒருவர் தெரு நாய்களுக்கு உணவளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதில் நாய் ஒன்று அதே பகுதியில் வசிக்கும் சபேஸ் என்ற 14 வயது சிறுவனை கடித்துள்ளது. பயத்தின் காரணமாக நாய் கடித்தது குறித்து பெற்றோரிடம் சிறுவன் தெரிவிக்காமல் இருந்து வந்துள்ளான்.
4 நாட்களுக்கு முன்பு விலங்குகளை போல சிறுவன் சப்தம் எழுப்பியதால் அச்சமடைந்த பெற்றோர், மருத்துவர்களிடம் சென்று பரிசோதித்தனர். அப்போது ரேபிஸ் நோயால் சிறுவன் பாதிக்கப்பட்டுள்ளான் என்று மருத்துவர்கள் கூறியதை அடுத்து மேல் சிகிச்சைக்காக காசியாபாத், மீரட் மற்றும் டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட பல மருத்துவமனைகளுக்கு சிறுவன் அழைத்து செல்லப்பட்டான். கடைசியாக புலன் ஷாகருக்கு அழைத்து செல்லப்பட்டு வீடு திரும்பும் போது ரேபிஸ் நோய் தொற்று முற்றி தந்தையின் மடியிலேயே சிறுவன் வலியால் துடிதுடித்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
சிறுவன் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபேஸின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து தெரு நாய்களுக்கு உணவு அளித்து வந்த பெண்ணுக்கு காசியாபாத் மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
The post உ.பி.யில் ரேபிஸ் நோய்த்தொற்று முற்றி 14 வயது சிறுவன் பலி; தந்தையின் மடியிலேயே துடிதுடித்து உயிரிழந்த சோகம்..!! appeared first on Dinakaran.