ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலி பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது. எனவே, பள்ளி மேலாண்மை குழு மூலம், தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேற்காணும் பணியிடத்திற்கு கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்கள்: வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன், ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள். இல்லையெனில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை, வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன், ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்: முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கான ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளில் பங்கேற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள், பள்ளி அமைந்துள்ள எல்லைக்குள் வசிப்பவர்கள். மாவட்ட எல்லைக்குள் வசிப்பவர்கள், அருகாமை மாவட்டத்தில் வசிப்பவர்கள்.

காலிப்பணியிட விவரங்கள்: விருகம்பாக்கம், வளசரவாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளிகளில் தலா ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடம் (சம்பளம் ரூ.12,000). வடபெரும்பாக்கத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல தொடக்க பள்ளியில் (ஓராசிரியர் பள்ளி), இடைநிலை ஆசிரியர் நிலையில் தலைமை ஆசிரியர் பணியிடம் (சம்பளம் ரூ.12,000). மதுரவாயலில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப் பள்ளியில் தமிழ், ஆங்கிலம், சமூக அறிவியல் ஆசிரியர்கள் ஆகிய 3 பணியிடம், திருமங்கலம், அரசு ஆதிதிராவிடர் நல உயர் நிலைப் பள்ளியில் அறிவியல், சமூக அறிவியல் என 2 பணியிடம் என 5 பட்டதாரி ஆசிரியர்கள் (சம்பளம் ரூ.15,000).

கன்னிகாபுரம் ஆண்கள் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி, இயற்பியல் மற்றும் வரலாறு ஆசிரியர்கள் மற்றும் கன்னிகாபுரம் பெண்கள் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியர் என 3 முதுகலை பட்டதாரி ஆசிரியரகள் பணியிடங்கள் (சம்பளம் ரூ.18,000). என மொத்த 11 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தகுதியான நபர்கள் சென்னை மாவட்ட ஆட்சியரகத்தின் 2வது தளத்தில் இயங்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலத்தில் விண்ணப்பங்களை நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ வரும் 8ம் தேதி மாலை 5.45 மணிக்குள் அளிக்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடம் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: