2023 சிலம்ப கலை வீரர்கள் பங்கேற்று உலக வரைபடம்போல் சிலம்பம் சுற்றி சாதனை

குன்றத்துார்: குன்றத்தூர் அருகே 2023 சிலம்ப கலை விளையாட்டு வீரர்கள், உலக வரைபடம்போல் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளனர். குன்றத்தூர் அடுத்த கோவூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில், சிலம்ப ஆசான்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து உலக வரைபடம் போல் நின்று சுமார் ஒரு மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி சாதனை படைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், 2023 சிலம்பக் கலை வீரர்கள், வீராங்கனைகள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் சிலம்பம் சுற்றி சாதனையை படைத்தனர்.

இந்த சாதனையானது யுனிவர்சல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெகார்ட் மற்றும் பியூச்சர் கலாம்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது. அதனைத்தொடர்ந்து சாதனை நிகழ்வில் பங்கேற்ற சிலம்ப ஆசான்களுக்கு நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், சிறப்பாக சிலம்பம் சுற்றி சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் பதக்கங்கள் ஆகியவை தமிழ்நாடு சிலம்ப கழகம் சார்பில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், சிலம்பம் சுற்றும் மாணவிகள் மேடையில் பரதநாட்டியம் ஆடி அசத்தினர். தொடர்ந்து பரதநாட்டிய உடை அணிந்து கொண்டு சிறுமி ஒருவர் சிலம்பம் சுற்றியது கூடியிருந்தவர்களை மெய் சிலிர்க்கும் வண்ணம் இருந்தது.

இதில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சிலம்ப கலை பள்ளிகளை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். அப்போது, வரும் 2024ம் ஆண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கேலோ இந்தியா விளையாட்டை தமிழ்நாட்டில் நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். எனவே, சிலம்ப கலைக்கு முக்கிய வாய்ப்பு தந்து அனைத்து சிலம்ப வீரர்களும் பங்கேற்க சிறப்பு திட்டம் ஏற்படுத்த வேண்டும் என விளையாட்டு துறை அமைச்சருக்கு, சிலம்ப ஆசான்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post 2023 சிலம்ப கலை வீரர்கள் பங்கேற்று உலக வரைபடம்போல் சிலம்பம் சுற்றி சாதனை appeared first on Dinakaran.

Related Stories: