நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை: ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது

நிலக்கோட்டை: நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் கொடைரோடு-நிலக்கோட்டை பிரதான சாலை அம்மையநாயக்கனூர் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம் , நிலக்கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அப்பகுதி காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன் நீண்ட நாட்களுக்கு பிறகு வெப்பம் தனிந்து இதமான குளிர்ந்த காற்று வீசியது.

பல மணிநேரம் பெய்த கனமழையால் பருவமழை துவங்கியதென அப்பகுதி விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர், இந்நிலையில் கொடைரோட்டில் இருந்து அம்மையநாயக்கனூர் வழியாக நிலக்கோட்டை, வத்தலக்குண்டு செல்லும் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள அம்மையநாயக்கனூர் ரயில்வே சுரங்க பாதையில் சுமார் 6 அடி உயரத்திற்கு கடல் போல் தேங்கிய மழை நீரால் சாலையை கடக்க முயன்ற வாகனங்கள் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேலும் நேற்று இரவு முதல் காலை வரை கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பழுதாகி நின்றது. மேலும் மழை நீர் வடிகால் கால்வாய் அமைப்பு போன்ற சரியான திட்டமிடல் இல்லாமல் பிரதான நெடுஞ்சாலையின் குறுக்கே ரயில்வே நிர்வாகத்தால் கட்டப்பட்ட இரயில்வே சுரங்க பாதையில் அடிக்கடி தேங்கும் மழைநீரால் அப்பகுதி வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதியுற்று வருகின்றனர். இதற்கு ரயில்வே நிர்வாகமும் நெடுஞ்சாலை துறையினரும் நிரந்தர தீர்வு காண வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

The post நிலக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழை: ரயில்வே சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது appeared first on Dinakaran.

Related Stories: