10 கிராமங்கள் இருளில் மூழ்கியது * லாரிகளை சிறை பிடித்த மக்கள் * பொன்னை அருகே பரபரப்பு டிப்பர் லாரி உரசி 20 மின்கம்பங்கள் சேதம்

பொன்னை, செப்.3: காட்பாடி அடுத்த பொன்னை அருகே நள்ளிரவு டிப்பர் லாரி உரசியதால் 20 மின்கம்பங்கள் உடைந்தது. இதனால், 10 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த மக்கள் டிப்பர் லாரிகளை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த மகிமண்டலம் பகுதியில் சென்னை-பெங்களூரு விரைவு சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த விரைவு சாலைக்கு பல்வேறு இடங்களில் இருந்து டிப்பர் லாரிகளில் மண் ஏற்றி வரப்பட்டு கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி டிரைவர் மண்ணை கொட்டி விட்டார். பின்னர், லாரியின் பின்புற டோரை மடிக்காமல் லாரியை கொண்டு சென்றதாக தெரிகிறது. அந்த டோர் அங்குள்ள மின்கம்பியில் உரசி உள்ளது. இதனால், அப்பகுதியில் இருந்த 20 மின்கம்பங்கள் உடைந்து சாய்ந்தது. மேலும், மின்ஒயர்கள் அறுந்து விழுந்தது. இதில் மகிமண்டலம், போடிநத்தம், பெரிய போடிநத்தம் உள்ளிட்ட 10 கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் இரவு முழுவதும் மின்சாரம் இன்றி தவித்தனர். இதையடுத்து, நேற்று காலை சுமார் 10 மணியளவில் அப்பகுதியில் மண் ஏற்றிச்சென்ற 4 டிப்பர் லாரிகளை அப்பகுதிமக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மேல்பாடி போலீசார் அங்கு விரைந்து வந்து டிப்பர் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post 10 கிராமங்கள் இருளில் மூழ்கியது * லாரிகளை சிறை பிடித்த மக்கள் * பொன்னை அருகே பரபரப்பு டிப்பர் லாரி உரசி 20 மின்கம்பங்கள் சேதம் appeared first on Dinakaran.

Related Stories: