தாயை தற்கொலைக்கு தூண்டிய தந்தையை பிடிச்சு உள்ளே போடுங்க சார் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்த சிறுவன் குடிபோதையில் தினமும் துன்புறுத்துகிறார்

குடியாத்தம், செப்.3: குடியாத்தத்தில் குடிபோதையில் தினமும் துன்புறுத்தியதால் தாய் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். என் தந்தையை பிடிச்சு உள்ளோ போடுங்க சார் என்று குடியாத்தம் போலீசில் 13 வயது சிறுவன் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த முல்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர்(38), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பரானா(35). இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு 5 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஜாபர் குடிபோதையில் அவரது மனைவியை அடித்து துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. மேலும், பிள்ளைகளையும் அடித்ததாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்து பரானா நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது உறவினர்கள் பரானாவை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அவரது 13 வயதான 2வது மகன், சைக்கிளில் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு நேற்று முன்தினம் சென்று, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம், எனது தந்தை குடிபோதையில் தாயையும், எங்களையும் துன்புறுத்துகிறார். அவரை பிடிச்சு உள்ளே போடுங்க சார் என புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜாபரிடம் விசாரணை நடத்தி அறிவுரை வழங்கினர். இதற்கிடையே, நேற்று குடியாத்தம் தனியார் திருமண மண்டபத்தில் காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர்வு கூட்டம் நடந்தது. இதில் ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன், குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி உட்பட அதிகாரிகள் கலந்து கெண்டனர். இந்த கூட்டத்திலும் 13 வயது சிறுவன் வந்து தந்தை மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு அளித்தார். அதன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

The post தாயை தற்கொலைக்கு தூண்டிய தந்தையை பிடிச்சு உள்ளே போடுங்க சார் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்த சிறுவன் குடிபோதையில் தினமும் துன்புறுத்துகிறார் appeared first on Dinakaran.

Related Stories: