நன்கொடையில் கட்டிய விருந்தினர் மாளிகையில் நீர்க்கசிவு; திருமலையில் விஜய் மல்லையாவுக்கு வழங்கிய நிலத்துக்கான ஒப்பந்தம் ரத்து: பராமரிப்பு நோட்டீஸ் திரும்ப வந்ததால் தீர்மானம்

திருமலை: திருமலையில் விஜய் மல்லையாவுக்கு வழங்கிய நிலத்துக்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்கள் தங்குவதற்காக பல்வேறு ஓய்வறைகள் உள்ளது. இந்த ஓய்வு அறைகளை கட்ட தேவஸ்தானம் சார்பில் இடம் மட்டும் வழங்கப்படும். அதில் நன்கொடையாளர்கள் நிதியில் ஓய்வறை கட்டி பெறப்படுகிறது. பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா 1991ம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஓய்வறைகளை கட்ட முன்வந்தார். இதற்காக தேவஸ்தானம் சார்பில் 1993ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஓய்வறை கட்ட திருமலையில் வேதப்பாட சாலை செல்லும் வழியில் சிலாதோரணம் அருகே இடம் வழங்கப்பட்டது. இதில் விஜய் மல்லையா தரப்பில் 9 சூட் அறைகளுடன் 1997ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி காட்டேஜ் கட்டி முடிக்கப்பட்டு வெங்கட விஜயம் என்று பெயர் வைக்கப்பட்டு தேவஸ்தானத்திற்கு வழங்கினார்.

இந்த ஓய்வறை கட்டி 26 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஓய்வறையில் பல இடங்களில் நீர் கசிவு மற்றும் பெயிண்ட் உதிர்ந்து காணப்பட்டது. இதனால் தேவஸ்தானம் சார்பில் காட்டேஜ் நன்கொடையாளர் திட்டத்தின் கீழ் ஒப்பந்தம் புதுப்பித்து பராமரிக்க வேண்டும் என கடந்த மார்ச் 21ம் தேதி தேவஸ்தானம் சார்பில் பெங்களூருவில் விட்டல் மல்லைய்யா சாலையில் உள்ள விஜய் மல்லைய்யா தங்கியிருந்த வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் விஜய் மல்லைய்யா
வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளதால் அவரிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை. அதனால் ஏப்ரல் 3ம் தேதி தேவஸ்தானம் அனுப்பிய நோட்டீஸ் திரும்பி வந்தது.

கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி, மல்லையாவுடன் தொடர்பை ஏற்படுத்த வழியின்றி ஓய்வறைக்கு வழங்கிய நிலத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய அறங்காவலர் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் இந்த ஓய்வறையை புதுப்பிப்பதற்கும், புனரமைப்பதற்கும் ரூ.5 கோடி அல்லது அதற்கு மேல் நன்கொடை வழங்க முன்வரும் நன்கொடையாளர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

The post நன்கொடையில் கட்டிய விருந்தினர் மாளிகையில் நீர்க்கசிவு; திருமலையில் விஜய் மல்லையாவுக்கு வழங்கிய நிலத்துக்கான ஒப்பந்தம் ரத்து: பராமரிப்பு நோட்டீஸ் திரும்ப வந்ததால் தீர்மானம் appeared first on Dinakaran.

Related Stories: