‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு அறிவிப்பு: அமித்ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுப்பினர்களாக சேர்ப்பு

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையிலான இந்த குழுவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ ஆட்சி அமைத்ததில் இருந்தே, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து வலியுறுத்தி வருகிறது.

இந்த யோசனையை ஆதரித்து கடந்த 2018ம் ஆண்டு ஒன்றிய சட்ட ஆணையம் வரைவு அறிக்கை சமர்பித்தது. அதில், ‘அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தங்கள் மூலம் மட்டுமே ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியும். குறைந்தபட்சம் 50 சதவீத மாநிலங்கள் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என பரிந்துரைத்தது.இதைத் தொடர்ந்து, அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், மீண்டும் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடவடிக்கையை ஒன்றிய பாஜ அரசு தற்போது தீவிரப்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலுக்காக அரசியலமைப்பு சட்டத்தில் முக்கிய திருத்தத்தை மேற்கொள்ள வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை ஒன்றிய அரசு கூட்டி உள்ளது.

மேலும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள 8 பேர் கொண்ட உயர்மட்ட குழுவை ஒன்றிய சட்ட ஆணையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குழுவின் தலைவராகவும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், முன்னாள் நிதி கமிஷன் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் தலைமை செயலாளர் சுபாஷ் காஸ்யப், மூத்த வக்கீல் ஹரிஷ் சால்வே மற்றும் முன்னாள் ஊழல் தடுப்பு துறை ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் உயர்மட்ட குழு கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்பார். சட்ட விவகார செயலாளர் நிதன் சந்திரா குழுவின் செயலாளராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு உடனடியாக செயல்படத் தொடங்கி, விரைவில் தனது பரிந்துரைகளை வழங்கும் என சட்ட அமைச்சக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறி பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய அரசின் விரைவான செயல்பாடு தேசிய அரசியலில் பரபரப்பை அதிகரித்துள்ளது.

உயர்மட்ட குழு என்ன செய்யும்?
* ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான கட்டமைப்பு, எத்தனை கட்டங்களாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து உயர்மட்ட குழு ஆய்வு செய்யும்.
* ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தேவையான மின்னணு வாக்கு இயந்திரங்கள், ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் உள்ளிட்ட தளவாடங்கள், பாதுகாப்பு வீரர்கள், மனித வளங்கள் குறித்து ஆய்வு செய்யும்.
* மக்களவை, மாநில சட்டப் பேரவைகள் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு ஒற்றை வாக்காளர் பட்டியல் தயாரிப்பது மற்றும் ஒரே வாக்காளர் அட்டையை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து பரிந்துரைக்கும்.
* அரசியலமைப்புச் சட்டம், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் மற்றும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நோக்கத்திற்காக திருத்தப்பட வேண்டிய பிற சட்டங்கள் மற்றும் விதிகளில் குறிப்பிட்ட திருத்தங்களை ஆய்வு செய்து பரிந்துரைக்கும்.
* அரசியலமைப்பு சட்டத் திருத்தங்களுக்கு மாநிலங்கள் ஒப்புதல் தேவையா என்பதையும் ஆய்வு செய்து பரிந்துரைக்கும்.
* இந்த குழு டெல்லியில் இருந்தபடி உடனடியாக செயல்படத் தொடங்கி, கூடிய விரைவில் தனது பரிந்துரைகளை வழங்கும்.

சிறப்பு கூட்டம் எப்படி நடக்கும்?
வரும் 18ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்க உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவை தலைமை செயலகங்கள் நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளன. அதில், சிறப்பு கூட்டம் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் அலுவல்கள் எதுவும் இன்றி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து எம்பிக்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு கூட்டத்தொடர் எதற்காக கூட்டப்படுகிறது என்பது அரசு தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து ஆய்வு செய்ய 8 பேர் கொண்ட உயர்மட்ட குழு அறிவிப்பு: அமித்ஷா, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உறுப்பினர்களாக சேர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: