இந்தியா கூட்டணி 2-வது நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது: காங். தலைவர் கார்கே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

மும்பை: இந்தியா கூட்டணி 2-வது நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. மும்பையில் நடக்கும் இந்தியா கூட்டணி ஆலோசனையில் காங். தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்று உள்ளனர். இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

ஒருங்கிணைப்பு குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கூட்டணிக்கான அலுவலகம், 10 பேர் கொண்ட செய்தி தொடர்பாளர் குழு நியமனம் தேர்தலில் கூட்டு பிரசாரம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக சிறப்பு குழு நியமனம் குறித்து ஆலோசிக்கப்படுமா? செப். 18 முதல் 22 வரை நடைபெறும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்திற்கான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது.

கட்சிகள் பலம், கள நிலவரம் ஆகியவற்றின் அடிப்படையில் தொகுதி பங்கீடு செய்ய மாநில கட்சிகள் கருத்து கூறியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஆலோசனைக்கூட்டம் முடிந்த பின், மதியம் 3.30 மணிக்கு கூட்டணி தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர். கூட்டணியின் லோகோவில் மாற்றங்களை ஏற்படுத்த சில கட்சிகள் பரிந்துரை செய்திருப்பதால், இன்று வெளியிடப்படாது என கூறப்பட்டுள்ளது.

பிரச்சார உத்தியை உருவாக்கி, முறையான கட்டமைப்பை இறுதி செய்வது குறித்தும், செய்தி தொடர்பாளர் நியமனம், ஒருங்கிணைப்பாளர் வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது. பிரசாரம், பேரணிகளை திட்டமிடவும், சமூக ஊடகங்களை கையாளவும் தனித்தனி குழுக்கள் நியமிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இந்தியா கூட்டணி 2-வது நாள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது: காங். தலைவர் கார்கே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: