காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் செயல்படாத மஞ்சப் பை தானியங்கி இயந்திரம்; பக்தர்கள் ஏமாற்றம்: செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் செயல்படாமல் உள்ள மஞ்சப் பை தானியங்கி இயந்திரத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், மஞ்சப்பை பயன்பாடு குறித்து அரசு சார்பில் மக்களிடையே பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் அனைவரும் பயன்பெறும் வகையில் பொது இடங்களில் ₹10 செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் வகையில் தானியங்கி இயந்திரம் வைக்கப்படுகிறது. அதனடிப்படையில், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை நிறுத்தும் வகையில், மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டினை கொண்டுவர தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்பட்டது. இதனை அப்போதைய மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மற்றும் காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்நிலையில், திறந்து வைக்கப்பட்ட சில நாட்கள் மஞ்சப்பை விற்பனை இயந்திரம் முறையாக செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது, மஞ்சப்பை விற்பனை இயந்திரம் செயல்படாமல் காட்சி பொருளாக உள்ளது. அதேபோல், அதில் முறையாக பைகளும் வைக்காமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். கோயிலுக்கு வரும் ஒரு சிலர் குச்சி போன்ற பொருள்களை விட்டு மஞ்சப்பை எடுக்க முயற்சி செய்வது, குழந்தைகளின் கைகளை நுழைத்து எடுக்க முயற்சி செய்தது போன்ற காரணங்களாள் மஞ்சப்பை தானியங்கி இயந்திரம் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் 10 ரூபாய் நாணயத்தை செலுத்தினால் ஏற்கும் இயந்திரம், மஞ்சப்பை வெளியே வருவது இல்லை. மேலும், பக்தர்கள் செலுத்திய நாணயமும் திரும்ப வராததால் பக்தர்கள் ஏமாற்றும் அடைகின்றனர். எனவே, மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் செயல்படாத மஞ்சப் பை தானியங்கி இயந்திரம்; பக்தர்கள் ஏமாற்றம்: செயல்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: