இதன் முதல் கட்டமாக காஸ் விலையை ரூ.200 குறைத்துள்ளது. இது வரும் தேர்தலில் பிளஸ் பாயிண்ட் ஆக அமையலாம் என பாஜ எண்ணியிருக்கலாம். ஆனால், காங். ஆட்சியில் இருந்தவரை ரூ.414க்கு விற்ற காஸ் சிலிண்டர், கிட்டத்தட்ட 3 மடங்கு அளவு பாஜ ஆட்சியில் உயர்த்தப்பட்டுள்ளது. சில்லறை விலையில் மொத்தமாக நகர்ப்புறத்தில் வசிக்கும் ஒருவர் ரூ.1,200 வரை தர வேண்டிய அவல நிலை இருந்து வந்தது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்தின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்கள், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இதன்படி பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும், காஸ் விலை மாதந்தோறும் 1 அல்லது 2ம் தேதிகளில் மாற்றமடையும். ஏற்கனவே, காஸ் சிலிண்டருக்காக தரப்பட்ட மானியம் 80 சதவீதத்திற்கு மேலான நுகர்வோருக்கு அறிவிப்பின்றி நிறுத்தப்பட்டு விட்டது. இந்த சூழலில் காஸ் சிலிண்டரின் விலை குறைப்பு, எத்தனை நாள் நீடிக்குமென தெரியவில்லை. காஸ் சிலிண்டர் விலை குறைப்பு சிறு மகிழ்ச்சியை தந்தாலும், நள்ளிரவு முதல் டோல்கேட் கட்டணத்தை 10 – 20 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தி அடுத்த அதிர்ச்சியை தந்துள்ளது ஒன்றிய அரசு.
தமிழகத்தில் மட்டும் 26 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண முறை அமலுக்கு வருகிறது. டோல்கேட் கட்டணம் உயரும்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் வாய்ப்புகள் உள்ளன. சிலிண்டர் விலையை குறைத்தது போல நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் பெட்ரோல், டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என எதிர்க்கட்சிகள், பாஜ அரசுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளன. 5 மாநிலங்களின் சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை மனதில் வைத்தே, இந்த விலைக்குறைப்பு நாடகத்தை பாஜ அரசு அரங்கேற்றியுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த பரபரப்பான சூழலில், பாஜ அரசின் இந்த தேர்தல் நாடகங்களை அம்பலப்படுத்தவும், நாடாளுமன்ற தேர்தலில் பாஜவை எதிர்கொள்வதற்கான வியூகம் அமைப்பதற்காகவும், அடுத்தக்கட்ட செயல்பாடுகள், தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் யாரை நியமிப்பது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுப்பதற்காகவும் இன்று மும்பையில் ‘இந்தியா’ கூட்டணியின் 3வது கூட்டம் நடக்க உள்ளது. இதில் காங்., திமுக, திரிணமுல் காங் உள்ளிட்ட கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இக்கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன்மூலம் இந்தியா கூட்டணியின் பலம் மேலும் அதிகரிக்கும். ‘இந்தியா’ கூட்டணியின் முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டமும், இனி இக்கூட்டணியின் செயல்பாடுகளும் அடுத்தாண்டு இந்தியாவில் ஆட்சி மாற்றத்துக்கு வழி வகுக்கும் வாய்ப்புகளை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
The post ஏற்றமும்… இறக்கமும்… appeared first on Dinakaran.
