பவித்ர உற்சவத்தில் மழைவேண்டி சிறப்பு யாகம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில்

பெரணமல்லூர், ஆக. 30: பெரணமல்லூர் அருகே லட்சுமி நரசிம்மர் கோயிலில் நடைபெற்று வரும் பவித்ர உற்சவத்தில் மழைவேண்டி சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பெரணமல்லூர் அடுத்த ஆவணியாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயிலில் கடந்த 26ம்தேதி முதல் பவித்ர உற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவில் நாள்தோறும் சுவாமிகளுக்கு பவித்ர மாலை சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், வேதபாராயணம் பாடப்பட்டு வந்தது. இந்நிலையில் விழாவின் இறுதி நாளான நேற்று மழைவேண்டி யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. இதனையொட்டி அதிகாலை மூலவர் லட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து நவகலசங்கள் அமைத்து மழைவேண்டி பட்டாச்சாரியார் முகுந்தன் தலைமையில் யாக வேள்வி பூஜை நடத்தப்பட்டது. வேள்வி பூஜையில் நவதானியங்கள், மூலிகைகள், பட்டு புடவையிட்டு மகாபூர்ணாஹூதி நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

The post பவித்ர உற்சவத்தில் மழைவேண்டி சிறப்பு யாகம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் ஆவணியாபுரம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: