இந்தியா கூட்டணி ஆலோசனை மும்பை சென்றனர் லாலு, தேஜஸ்வி: தொகுதிகள் பங்கீடு குறித்து ஆலோசனை

மும்பை: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க லாலுபிரசாத் யாதவ், தேஜஸ்வி ஆகியோர் மும்பை சென்றடைந்தனர். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து உள்ளன. இந்த அணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் முதல் கூட்டம் நடந்தது. பெங்களூருவில் 2வது கூட்டம் நடந்தது. நாளை மும்பையில் 3வது கூட்டம் தொடங்க உள்ளது. 2 நாள் நடக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்க பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் நேற்று மும்பை சென்றடைந்தனர். காங்கிரஸ் தலைவர்கள் சஞ்சய் நிருபம், நசீம்கான் ஆகியோர் அவர்களை மும்பை விமானநிலையத்தில் வரவேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீடு செய்வது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்காக அனைத்து கூட்டணி கட்சிகள் சார்பில் முன்னணி தலைவர்களும் மும்பைக்கு வர உள்ளனர். அவர்கள் தங்குவதற்கு வசதியாக ஹயாத் ஓட்டலில் அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தியா கூட்டணியின் சின்னம் வெளியிடப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகள் ஒதுக்கீடு முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் நானா படோல் தெரிவித்தார்.

* ராகுல்காந்திக்கு பாராட்டு விழா
மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படோல் கூறுகையில்,’ மோடி அரசு தனது பழிவாங்கும் அரசியலின் ஒரு பகுதியாக ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் இருந்து தகுதி நீக்கம் செய்தது. ஆனால் அவர் அசையவில்லை, அதற்கு பதிலாக பயப்படாதே என்ற செய்தியைக் கொடுத்தார். இந்தியா மாநாட்டிற்காக இரண்டு நாட்கள் மும்பையில் தங்கியிருக்கும் ராகுல் காந்திக்கு மாநில காங்கிரஸ் பிரமாண்டமான பாராட்டு விழாவை நடத்தவுள்ளது’ என்றார்.

The post இந்தியா கூட்டணி ஆலோசனை மும்பை சென்றனர் லாலு, தேஜஸ்வி: தொகுதிகள் பங்கீடு குறித்து ஆலோசனை appeared first on Dinakaran.

Related Stories: